வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்

சிங்கநெஞ்சன்

சென்னை என்றதும் நம்மில் பலருக்கு, குறிப்பாக நம் பெண்மணிகளுக்கு நினைவிற்கு வருவது, ‘டீ நகர்’ தான். “இந்த டீ நகரில் உள்ள ‘டீ’ யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்று பலரைக் கேட்டுப் பார்த்தேன். படித்தவர்களுக்குக்கூட, சரியான விடை தெரியவில்லை. ‘தியாகராய நகர்’ என்று சரியாக சொன்னவர்களிடம், “யார் இந்த தியாகராயர்” எனக் கேட்டபோது பெரும்பாலானோர் ‘நடிகர் தியாகராஜ பாகவதராயிருக்கலாம்’ என்றார்கள். சரியான விடையை சொன்னவர்கள் மிகச் சிலரே.


சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் கட்டிடத்தின் (மாநகராட்சி வளாகம்) முன்னே, சிலை வடிவில் நிற்கும் வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்தான், டீ. நகருக்குப் பெயர் தந்த பெருமான். இந்த சிலை 1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் அப்போதைய சென்னை மாகாண ஆளுனர் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் அடியில் பீடத்தை சுற்றி, பள்ளிச் சிறுவர்கள் கையில் புத்தகங்களோடு இருப்பதை போல் சிறு சிறு சிலைகள் உள்ளன. சென்னை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலையில் கூட அவருக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்கள் சிலைகளைக் காணலாம். தமிழகத்தில் ஏழைச் சிறார்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருமை. இந்த பெருமக்களையே சாரும்.

குறிப்பாக 1897ஆம் ஆண்டு வட சென்னையில் தான் வசித்து வந்த வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தம் சொந்த செலவில் துவக்கப் பள்ளி ஒன்றைத் துவங்கி, அதில் படிக்க வந்த மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் வழங்கியிருக்கிறார் தியாகராயர். இந்தப் பள்ளியே பின்னாளில் தியாகராயர் கல்லூரியாக மலர்ந்தது.1917இல் தம் சொத்தில் ஒரு பகுதியை கல்விக்காக தானம் செய்தார் இவர். 1920ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் நாள், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். உடன், சென்னையில், எல்லோரும்-குறிப்பாக ஏழை மக்கள், கல்வி அறிவு பெறுவதற்காக, ஐந்து இடங்களில் நகராட்சிப் பள்ளிகள் திறந்தார். அவற்றுள் ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த நகராட்சிப் பள்ளியில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் இப்பெருமகனார். நெசவாளர் சமூகத்தை சேர்ந்த இவர் , அந்தக் குலத்தில் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் எனும் பெருமை பெற்றார். -1920இல் ஐந்தாக இருந்த மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 1923இல் 45ஆக உயர்ந்தது..இப்போதுள்ள சத்துணவு திட்டத்திற்கு முன்னோடி , 1960களில் காமராஜர் கொண்டு வந்த ‘மதிய உணவுதிட்டம்’ என்பர்.அந்த மதிய உணவு திட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இவற்றுக்கெல்லாம் வழிகோலியவர் வள்ளல் தியாகராயர்.


‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். 1876ஆம் ஆண்டு தாது வருடத்திய பஞ்சத்தின் போது பசியில் வாடிய பாமர மக்களுக்கு மூன்று மாத காலம் உணவளித்து அவர்களின் துயரைப் போக்கினார் பசிப்பிணி மருத்துவர் தியாகராயர். இதற்காக அன்றைய ஆங்கில அரசின் பாராட்டையும் பெற்றார்.


1885ஆம் ஆண்டு முதலே, காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தியகராயர், 1916ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி, திருவாளர்கள் நடேச முதலியார், டி.எம். நாயர் இவர்களுடன் இணைந்து “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்“ எனும் அமைப்பை நிறுவினார். 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி அடைந்த போது தலைவர் தியகராயர்தான் சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். ஆளுநரும் அழைத்தார். ஆனால் அவரோ, கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை (கடலூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள ‘சுப்பராயலு நகர்’ இவர் பெயரில் அமைந்துள்ளது) பரிந்துரைத்தார். தலைமை அமைச்சராக பதவியேற்ற சுப்பராயலு ரெட்டியார் ஆறேழு மாதங்களில் உடல் நலக்குறைவால் பதவியை ராஜினமா செய்தார். இப்போதாவது தியாகராயர் அரசுக்கு தலைமை ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். இம்முறையும் பதவியை நாடி ஓடாமல், தியாகராயர், பனகல் அரசரின் பெயரைப் பரிந்துரைக்க (பனகல் பூங்கா இவர் பெயரில் தான் உள்ளது), தலைமை அமைச்சரானார் பனகல் அரசர்.
1923ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்து , நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த முறையாவது தலைமை அமைச்சராவார் தியாகராயர் என எண்ணியோரின் எண்ணங்களுக்கு மாறாக, உடல்நலத்தைக் காரணம் காட்டி மீண்டும் பனகல் அரசரைப் பதவியில் அமர்த்தினார் தியாகராயர். மும்முறை தன்னைத் தேடி வந்த தலைமை அமைச்சர் பதவியை ‘வேண்டாம்’ என ஒதுக்கிய இவர் உண்மையிலேயே “தியாக” – ராயர்தான். இவரின் இந்த செயலை, அன்றைய சென்னை மாகாண ஆளுநர் வெல்லிங்டன் பிரபு வியந்து பாராட்டினாராம்.


செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் நல் விருந்தாளர் தியாக ராயர். இவர் இல்லத்தில் பாமரர் முதல் பணக்காரர்கள் வரை பலரும் வந்து விருந்துண்டு செல்வது வழக்கம். இந்த விருந்தினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரச குடுபத்தினரும் அடக்கம். 1905ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ், பின்னர் எட்டாம் எட்வர்ட் ஆகியோர் தியாகராயரின் விருந்தோம்பலில் திளைத்தவர்கள். இரண்டாம் காங்கிரஸ் மாநாட்டின் போது சென்னை வந்த காந்தியடிகள், தியாகராயரின் பிட்டி நூற்பாலை சென்று தறி நெய்து பார்த்திருக்கிறார். தன் பிள்ளைகள் இருவரை தறிநெசவு பயிற்சிக்கும் இங்கே அனுப்பியிருக்கிறார்.

வெள்ளத் தலைப்பாகை –வெள்ளை சட்டை-கீழ்பாய்சிக்கட்டிய வெள்ளை வேட்டி , வெள்ளை மேல் துண்டு என எப்போதும் தூய வெள்ளை ஆடைகளையே விரும்பி அணிந்த தியாகராயர் மக்களால் “ வெள்ளாடை வேந்தர்” என்றே அன்பாக அழைக்கப்பட்டார். இந்த வெள்ளாடைக்கும் ஒரு முறை ஆபத்து வந்தது. 1922ஆம் ஆண்டு சனவரி மாதம் 13ஆம் நாள் சென்னைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் பேரரசின் அரசரை வரவேற்க, அன்றைய சென்னை மாநகராட்ச்சியின் தலைவர் என்கிற முறையில் தியாகராயர் செல்ல வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க செல்வோர் ஆங்கிலேய பாணியில் உடை அணிய வேண்டும் எனும் மரபு அப்போது கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நம் பண்பாட்டை விட்டுக் கொடுக்க விரும்பாத தியாகராயர், ஆங்கிலேய பாணியில் உடை அணிய மறுத்து அரசரை வரவேற்க, மாநகராட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவரை, அனுப்ப இருந்தாராம். இதை அறிந்த ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, தியகரயர்தான் அரசரை வரவேற்க செல்ல வேண்டும் எனச் சொல்லி, மரபுகளை மாற்றி, விதிகளைத் தளர்த்தி இவர் இந்திய உடையிலேயே சென்று மன்னரை வரவேற்க செய்தாராம். மன்னரே வந்தாலும் அதற்காக தன மரபுகளை மாற்றிக் கொள்ளாத மாமனிதர் தியாகராயர்.
ரிப்பன் பிரபு 1881-82இல் உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தியபோது, (மாநகராட்சிக் கட்டிடத்திற்கு “ரிப்பன் மாளிகை’ எனப் பெயரிட்டிருப்பதுபொருத்தம்தான்.), வடசென்னை வண்ணாரப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் பிரதிநிதியாக மாநகராட்சி மன்றம் நுழைந்தார் தியாகராயர். இது நிகழ்ந்தது 1882ல் அப்போது அவருக்கு வயது முப்பது. பின்னர் தேர்தல் நடந்தபோதும், இவரே வெற்றி பெற்றார். -1882முதல் 1922வரை மாநகராட்சியில் பணியாற்றியபோது இவர் செய்த பணிகள் பலப்பல.. குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சென்னை நகரம் பெரும் முன்னேற்றம் அடைய முழுமையாக பாடுபட்டார். நாட்டு மருத்துவச்சிகளின் பிரசவ முறையில் சிசு மரணம் அதிகம் நிகழ்வதை அறிந்த இவர், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆங்கிலேய மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்.


பார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, இவர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. இவரது இல்லத் தாழ்வாரத்தில் நடந்த பள்ளியில் பார்ப்பன மாணவர்கள் வடமொழி கற்றனர், திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்று உறுப்பினரான டி. .எம். நாயர் , மாநகராட்சிக் கூட்டத்தில், தெப்பத் திருவிழாவின் போது வறண்டிருந்த பார்த்தசாரதி கோவில் திருக்குளத்திற்கு மாநகராட்சி செலவில் தண்ணீர் ஏற்பாடு செய்யக் கூடாது என வாதிட்டார். அதை எதிர்த்துப் பேசிய உறுப்பினர் தியாகராயர் , விழாவின் பொது மாநகாராட்சி செலவில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தார். மயிலைத் திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ 10000 நன்கொடை அளித்தவர் தியாகராயர்.


இவர் ஆசைப்பட்டு நிறைவேறாமல் போன திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் ‘கூவம் சீரமைப்பு திட்டம்’ .அந்தக் காலத்தில் பச்சயப்ப முதலியார் ( பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையை நிறுவியவர்) கூவத்தில் குளித்துவிட்டுதான் குமரனை வழிபடச் செல்வாராம். ஆனால் தியாகராயர் காலத்திலேயே கூவம் மாசடைந்து விட்டது. கூவத்தை சீரமைத்து பழம் பெருமையை மீட்க இவர் திட்டமிட்டார். மாநகராட்சியிடம் நிதி வசதி இல்லை. அரசும் கை விரித்துவிட்டது. திட்டம் நிறைவேறவில்லை. விளைவு, இன்றும் நாம் கூவம் பக்கம் போகும்போது மூக்கில் விரல் வைக்க வேண்டியுள்ளது.


சமுதாய சீர்திருத்தச் செம்மல் தியாகராயரின் பெருமுயற்சியின் பயனாகவே நீதிக்கட்சி ஆட்சியில் “தீண்டாமை ஒழிப்பு சட்டம்”, “ வகுப்பு வாரி பிரதிநிதித் துவ சட்டம்” போன்றவை நிறைவேற்றப்பட்டன. நெசவுத் தொழிலில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த தியாகராயர், தறியில் புதுமைகள் பல செய்தார். தமிழகத்தில் விசைத் தறியை அறிமுகப் படுத்தியது இவரே.


அரசியலில் இவரை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிடும்போது “இப்பெரியாரின் வாழ்வு, பின் வருவோர்க்கு பெரிலக்கியம் போன்றது” என்கிறார். இவரது அரசியல் எதிரி சி.பி. இராமசாமி அய்யர் இவரது மறைவின் பொது “ ஒரு தன்னலமற்ற மனிதாபிமாநியை இழந்தோம்” என்றார். 1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் -பிறந்த தியாகராயர் 1925 ஏப்ரல் மாதம் 28 ஐந்து இடங்களில் ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் போன்ற மக்கள் நலம் பேணும் தலைவர்களே தமிழ்நாட்டின் இன்றைய தேவை.

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *