சிங்காநெஞ்சன்
சென்னையில்பாயும் கூவம் ஆறு, குசத்தலையாறு (கொற்றலையாறு) ஆகியவை பழைய பாலாற்றின் கிளையாறுகளின் எச்சங்களே என்று Robert Bruce Foote1கருதுகிறார். 1860 களில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட இவர், இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் புவியியலாளராகப் பணி புரிந்தவர்.பின்னாட்களில்,‘வரலாற்றிற்கு முந்தைய இந்தியத் தொல்லியலின் தந்தை’ என்று புகழப்பட்டவர். கூவம், குசத்தலை ஆற்றுப் படுகைகளின் அளவினைக் கண்ட இவர் இவை போன்ற சிறிய ஆறுகளால் இத்தனை பெரிய ஆற்றுப் படுகைகளை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டின் புவியியல் வரைபடம், காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் சுமார் 7௦௦௦ச.கி.மீ அளவிற்கும், தென்பெண்ணை ஆற்றின் கழிமுகப் பகுதியில் 13௦௦ச.கி.மீ. அளவிற்கும் டெல்டாக்கள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. சற்றேறக்குறைய தென்பெண்ணை ஆற்றின் அளவிலான பாலாற்றின் கழிமுகப் பகுதியில் டெல்டா ஒன்றும் உருவாகவில்லை. மாறாக, திருவான்மியூர்- புலிக்காட்ஏரி –காவேரிப்பாக்கம் இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 1500 ச.கி.மீ. அளவிற்கு டெல்டா ஒன்று உருவாகியுள்ளது. ஆனால், தற்போது அங்கே கூவம், குசத்தலையாறு, அடையாறு போன்ற சிற்றாறுகள் தவிரபெரிய ஆறு எதுவும் பாயவில்லை.
இந்தச் சிற்றாறுகளால் இத்தனை பெரிய டெல்டா உருவாகியிருக்க முடியாது எனக் கூறும் ப்ருஸ் ஃபுட் ,‘முற்காலத்தில் பாலாறு, காவேரிப் பாக்கம் பகுதியிலிருந்து, வடகிழக்கு திசையில் பாய்ந்து புலிக்காட் ஏரியின்
தென்புறத்தில் கடலில் கலந்திருக்கக் கூடும்; பின்னாளில் புவியியல் காரணங்களால் திசை மாறி தற்போது சென்னையிலிருந்து 70 கி.மீ தெற்கே கடலில் கலக்கிறது. எனும் கருத்தை முன் வைக்கிறார். இவர் காலத்தில் வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்டப் புவிப்படங்களோ, செய்கோள் படிமங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்கோள் படிமங்கள் இன்றைய புவியியலாளர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். இவைகளை உற்று நோக்குகையில் காவேரிப்பாக்கம் அருகேயிருந்து வடகிழக்கு நோக்கி செல்லும் ஆற்றின் தொல்தடச்சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன. திருவான்மியூருக்கும் புலிக்காட் ஏரிக்கும் இடையே விரிந்திருக்கும் டெல்டாவின் மேற்கு முனை (டெல்டாவின் துவக்கப்பகுதி) காவேரிப்பாக்கத்திற்கு அருகே பாலாற்றில்தான் ஆரம்பிக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ப்ருஸ் ஃபுட் அவர்களின் கருதுகோள் சரியே எனத் தோன்றுகிறது.
காவேரிப்பாக்கத்திற்கு மேற்கே, ஓடை ஒன்று “விருத்த க்ஷீரா நதி’ எனும் பெயரில் அழைக்கப்படுவதாக ப்ருஸ் ஃபுட் தனது நினைவேட்டில் குறிப்பிடுகிறார். இந்த வட சொல்லின் தமிழாக்கம் ‘பழைய பாலாறு’ என்பதே.
திருவள்ளூர் மாவட்டத்தில் குசத்தலையாற்றின் மருங்கே அமைந்துள்ள அத்திராம்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர், திருவள்ளூர், மேட்டுப்பாளையம், வடமதுரை போன்ற இடங்களில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்குச் சான்றுகளாகப் பல தடயங்களைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டதும் ப்ருஸ் ஃபுட் அவர்கள்தான்.
‘நதிகளை நாகரிகத்தின் தொட்டில்கள்’ என்பர் வரலாற்று அறிஞர்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்தபோது பெரிய ஆறு ஒன்று இங்கே பாய்ந்திருக்கலாம் என்பதற்குத் தொல்லியல் தடயங்கள் வலு சேர்கின்றன. மீஞ்சூர் அருகேயுள்ள அரியலூரில் முற்றாக் கரி மற்றும் பெரும் மரத்துண்டுகள் கிடைத்திருப்பது, இந்தத் தொல்தடத்தில் பேராறு ஒன்று ஓடியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
காவேரிப்பாக்கத்திற்கு அருகே இருந்து வடகிழக்காகப் பாய்ந்த பழைய பாலாற்றின் கிளை நதிகளோ அல்லது கிளை நதிகளின் மிச்சங்களோதான் இன்றைய கொசத்தலையாறும், கூவம் நதியும் என்பது தெளிவாகிறது. எனில், சென்னை பழைய பாலாற்றின் கழிமுகம்தானே!
காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பதினான்கிற்கும் மேற்பட்ட திவ்யதேசங்கள் உள்ளன. இத்தலங்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் ஐம்பதிற்கும் மேல் உள்ளன. ஆனால், இவற்றில் எங்கேயும் பாலாறு எனும் சொல் இல்லை. வெஃகாணை எனும் சொல் உள்ளது. வேகவதி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் திருமால் கிடந்த கோலத்தில் தடுத்துக் காஞ்சியைக் காத்தார் என்பது வைணவக் கதை. ஆக, வேகவதி இருந்திருக்கிறது, பாலாறு இல்லை. எனவே, பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் (கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டு) இன்றைக்குக் காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள பாலாறு இருந்திருக்கவில்லை, வேகவதி ஆறுதான் இருந்திருக்கிறது என்று எண்ண இடமுண்டு.
- Robert Bruce Foote: MEMOIRS OF THE GEOLOGICAL SURVEY OF INDIA, VOLUME X (1873). PP 20 – 25.