Home Article பட்டினத்தார் கோயில்

பட்டினத்தார் கோயில்

by Dr.K.Subashini
0 comment

காலம் – கிபி 10 ம் நூற்றாண்டு
இயற்பெயர் – சுவேதாரண்யன்
தாய் – ஞான கலை அம்மை
தந்தை – சிவநேசர்
மனைவி – சிவகலை
மகன் – மருதவாணர்
ஊர் – காவிரிப்பூம்பட்டினம்
வேறு பெயர்கள் – திருவெண்காடர் பட்டினத்துப் பிள்ளையார்
தொழில் – வாணிகம்

திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. எனவே திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். சிவபெருமான் திருவிடைமருதூரில் சிவபக்தி செல்வராய் வறுமையுற்று இருந்த சிவசருமர், சுசீலை தம்பதிக்கு தெய்வ குழந்தையாய் தோன்றி, தம்மை திருவெண்காடரிடம் பொருளுக்கு விற்று வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு கட்டளை யிட்டார்.

சிவபெருமானான மருதவாணர், திருவெண்காடர் இடம் வளர்ந்து தந்தையின் வாணிகம் தொழிலை செய்வதற்காக கடல் கடந்து வாணிகம் செய்து, கப்பலில் வரட்டி நிரப்பி அதன்மூலம் மாணிக்கம், ரத்தினம், வைரம் போன்றவைகளை வெளிப்படச் செய்து தந்தைக்கு பெருஞ்செல்வம் கிடைக்க செய்து மறைந்துவிட்டார்.

மகனை திருவெண்காடர் தேடிய பொழுது அவர் தன் தாயிடம் கொடுத்து சென்ற பெட்டியை திறந்து பார்த்த பொழுது அதிலிருந்த ஓலையில்

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”

என்று எழுதிய வாசகத்தை வாசித்ததும், உண்மை ஞானம் பெற்று அக்கணமே பாரனைத்தும் பொய்யென துறந்தார்.

பின்னர் சிவதல பயணத்தை மேற்கொண்டு வரும் போது சிவபெருமான் தோன்றி இவர் கையில் ஒரு பேய் கரும்பை தந்து இக் கரும்பு எந்தத் திருத்தலத்தில் உனக்கு இனிக்கிற தோ அதுவே உனக்கு இறப்பும் பிறப்பும் இல்லா சிவகதி அளிக்கும் தலம் என்று சொல்லி மறைந்தார்.

இவர் சென்ற எல்லா தலங்களிலும் கசந்த கரும்பு ஒற்றியூரில் இனித்தது கண்டு அதுவே தாம் முக்தி அடையும் தலம் என்று உணர்த்து கடற்கரையில் சிவலிங்கத் திருமேனி ஆனார்.

சுண்ணாம்பு,செங்கல், மரத்தாலான கட்டுமானமாக இருந்த கோயிலானது மூலவரான லிங்கத்தை தன் நிலை மாறாமல் கல் கோயிலாக கட்டுமானம் செய்யப்பட்டு 2015இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விமான லட்சண அடிப்படையில் கோயிலானது கிழக்கு பார்த்த இருதள சதுர விமானம் ஆகவும் விமானத்தின் முதல் தளத்தில் உள்ள கோட்டத்தில் செல்வந்தராக உள்ள பட்டினத்தாரின் உருவமும், பத்திரகிரியார் நாய் திருஓடு டன் இருக்கும் உருவமும், பட்டினத்தாரின் மனைவி, மகன் இருக்கும் உருவமும், ஊசி ஓலை உள்ள பேழை கொண்ட உருவமும் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது இரண்டாம் தளத்தில் குபேரன், தட்சிணாமூர்த்தி,நான்முகன், சுவாமி உருவங்கள் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது.

கோயிலானது கருவறை, அர்த்த மண்டபம்,மகா மண்டபம் மற்றும் தியான மண்டபமும் கூடிய சுற்றுச் சுவருடன் அமைக்கப்பட்டுள்ளது.

பரிவார தெய்வமாக இடதுபுறம் முருகனும், வலதுபுறம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அக்கினி மூலையில் மடப்பள்ளி, ஈசான மூலையில் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் தலவிருட்சம் பேய் கரும்பு.

இவர் இயற்றிய பாடல்கள் சில

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவினிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில்போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து

கடன்முறை பேசும் என உரைநாவும்
உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளைபிறை போல எயிரும் உரோமம்
முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

  முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
  அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
  சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
  எரியத் தழல் மூட்டுவேன்

  வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
  கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
  சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
  விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

  நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
  தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
  கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
  மெய்யிலே தீமூட்டு வேன்

  அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
  வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
  தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
  மானே எனஅழைத்த வாய்க்கு

  அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
  கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
  முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
  மகனே எனஅழைத்த வாய்க்கு

  முன்னை இட்ட தீ முப்புறத்திலே
  பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
  அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
  யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

  வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
  ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
  குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
  கருதி வளர்த்தெடுத்த கை

  வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
  வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
  உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
  தன்னையே ஈன்றெடுத்த தாய்

  வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
  நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
  எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
  எல்லாம் சிவமயமே யாம்

You may also like

Leave a Comment