Home Article சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

சிங்காரச் சென்னை என்றோர் கிழவி

by Dr.K.Subashini
0 comment

தேமொழி.

ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரின் தோற்றத்தைக் குறிக்கும் வகையில் “சென்னை விழா” நடைபெற்று வருகிறது. கடந்த 2004 முதல் இந்த நாள் ‘மெட்ராஸ் டே’ என்று சென்னைவாழ் மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 400 ஆவது ஆண்டு விழாவினை இன்னமும் சில ஆண்டுகளில் எட்டவிருக்கும் சென்னை ஒரு பழம் பெரும் நகரம்தான் என்றாலும், இச்சென்னை மாநகர் தனது 257 ஆம் ஆண்டில் நடை போடும் பொழுதே சென்னை நகரை “கிழவி” என்று ருட்யார்ட் கிப்லிங் எழுதியுள்ளார்.

ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது. அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான “தி ஜங்கில் புக்” என்பதாகும். அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகச் சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்திலிருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னை ஆங்கிலோ-இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப் பிறந்தவர். அவர் பிறந்தபொழுது அவர் தந்தை “Sir J. J. College of Architecture” என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார். அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஓர் இடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுகள் வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்) என்ற பெருமைகள் இவரைச் சாரும். மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலை பார்த்தார். பின்னர் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை. அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது. இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார். ஜங்கில் புக் கதையின் கருவாக இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல அவரது பிற படைப்புகளிலும் இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது “The Seven Seas” என்ற புத்தகத்தை (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm) கிப்லிங் பம்பாய் நகரத்திற்குச் சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே அதில் எழுதியுள்ளார். இந்தப் படைப்பில் ஓரிடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக “The song of the Cities” என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec, Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland). அவற்றில் மெட்ராஸ் நகரத்தின் கவிதைப் பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

The song of the Cities
(by Rudyard Kipling, 1896)

Madras
Clive kissed me on the mouth and eyes and brow,
Wonderful kisses, so that I became
Crowned above Queens –a withered beldame now,
Brooding on ancient fame.

(* beldame என்றால் பாட்டி, முதியவள், கிழவி என்று பொருள்)

இராபர்ட் கிளைவ் கொடுத்த அருமையான அன்பு முத்தங்களினால் முடிசூடிய இங்கிலாந்து அரசியைவிடவும் உயர்ந்த புகழுடன் இருந்த சென்னை நகரம் பிறகு பழம்பெருமையை எண்ணி வாடிய கிழவியாக இருப்பதாக சென்னை தன்னைப்பற்றிக் கூறுவது போல அக்கவிதைவரிகள் எழுதப்பட்ட ஆண்டு 1896, அதாவது சற்றொப்ப 125 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையின் நிலை கிழவியாக இவரால் கருதப்பட்டிருக்கிறது.

You may also like

Leave a Comment