Home Article வங்கக் கடல் தந்த கொடை – சென்னை

வங்கக் கடல் தந்த கொடை – சென்னை

by Dr.K.Subashini
0 comment

சிங்காநெஞ்சன்



சில ஆண்டுகளுக்கு முன்  திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக் கோயில் சென்றேன். அங்குத்  திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகத்தைக்  கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி,

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”

இதில் வரும் கானல் எனும் சொல்லிற்குக் “கடற்கரைச் சோலை” என்பதே பொருள். (சிலம்பில் வரும் “கானல் வரிகளை”  நினைவு கூர்க). மயிலைக் கோவிலுக்கு அருகே கடற்கரைச் சோலைகள் ; ஆஹா.

அடுத்து மூன்றாம் பதிகத்தில் முதல் வரி

ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்”

ஊர்ந்து வரும் அலைகள் உலா செய்கின்ற மயிலை. அருமை.

சரி, போதும். கபாலியை விட்டு சாரதியிடம் போகலாம் என்று           தேவாரத்தை  விட்டு விட்டு ஆழ்வார்கள் பக்கம் சென்று  திவ்ய பிரபந்தம் படித்தேன். திருமழிசை ஆழ்வாரின் பாசுரம் கண்ணில்பட்டது.

“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம்

அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்

திருவல்லிக்கேணியான் சென்று “

நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா

அல்லிக் கேணியான்’

 என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

உயர் ஓதத்தின்போது மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் அலைகள் வந்து சென்றனவாம் , அவை முத்தும் பவழமும் கொண்டு வந்து சேர்த்தனவாம் . 

இந்தத்  தேவார, திவ்யப் பிரபந்த வரிகளைப்  பார்க்கும் போது மயிலாப்பூரும் திருவல்லிக்கேணியும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறதே. இன்றைக்கு மயிலையும் திருவல்லிக்கேணியும் கடற்கரையிலிருந்து முறையே 1.4 கி.மீ. மற்றும் 1 கி.மீ. தூரத்தில் உள்ளன. அப்படியென்றால் கடந்த 1200 ஆண்டுகளில் கடல் ஒன்று முதல் ஒன்றரை கி. மீ. பின் வாங்கியுள்ளதா.? ஆம் என்றே சொல்லத் தொன்றுகிறது.

நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் இளநிலை ஆய்வாளர் பணி  தொடர்பாக கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) சென்றேன். அங்கே வடங்களைப் பதிப்பதற்காக அகழப்பட்ட நீள் குழிகளில் கருப்பு நிறக் களிமண் இருந்தது. அதில் வெண்மை நிறத்தில் புள்ளி புள்ளியாக ஏதோ இருந்தது. எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்த புவியியல் அறிஞர் ஆரோக்கியசாமி, “இவை கிளிஞ்சல் துண்டுகள். பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடல் இருந்தது என்பதற்கு இது அடையாளம்” என்றார். மலைத்துப் போய்விட்டேன்.. என்ன, அப்படியானால் கடல் இந்தப் பகுதியில் 4 – 5 கி.மீ. பின் வாங்கிவிட்டதா , இதெல்லாம் எப்போது நடந்திருக்கும் என்னும்  பல கேள்விகள் என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டன. அப்போது நான் இந்திய புவியியல் ஆய்வுத்துறையிலிருந்து பணி  ஆணைக்காகக் காத்திருந்தேன்

ஆண்டுகள் உருண்டோடின. வடஇந்தியாவில்  சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டுச்  சென்னைக்கு வந்ததும், கனவில் கடல் வந்தது. நாம் மேலே சொன்ன கடல் பின்வாங்கிய கதைகளை நிரூபிக்க வேண்டுமெனில், புராணம் படித்தால் போதாது. புவியியலும்  படிக்க வேண்டும்  என எண்ணி இந்திய புவியியல் ஆய்வுத்துறை (GEOLOGICAL SURVEY OF INDIA – GSI)1யின் நினைவேடுகளைப் (MEMOIRS) புரட்டினேன். 1870 களில் ROBERT BRUCE FOOTE அவர்கள் இந்தப்பகுதியில் தான் செய்த பணியைப் பற்றி எழுதியுள்ள அறிக்கை அந்த நினைவேடுகளில் இருந்தது. அந்தஅறிக்கையில் உள்ள சில செய்திகளைக்  கீழே தருகிறேன்.

“சென்னைக்கும் சதுரங்கப்பட்டினத்திற்கும்(SADRAS) இடையே உள்ள கடற்கரைப் பகுதி, அண்மைக்காலத்தில் உயர்ந்திருக்கிறது”.

“சென்னையின்பல பகுதிகளில் தோண்டப்பட்ட கிணறுகளில் உள்ள படிவப்படுகைகளில் கடல் சிப்பிகள்காணப்படுகின்றன.”

“1819 ஆம் ஆண்டு லண்டன் ஜியலாஜிகல் சொசைட்டியில் வாசித்த அறிக்கையில், பாபிங்க்டன் எனும் அறிஞர், சென்னைப் பகுதியில் உள்ள கரிய நிற களிமண்ணில் கடற் சிப்பிகள் கிடைக்கின்றன, ஆதலின் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.”

“1832 ஆம் ஆண்டு, கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ. மேற்கேயுள்ள LAND CUSTOM HOUSE  இல்தோண்டப்பட்ட இரு கிணறுகளில் 13 அடி ஆழத்திலும் 16 அடி ஆழத்திலும் கிடைத்த களிமண்ணில் கடற்சிப்பிகள் காணப்பட்டன.”

“கடந்த நூற்றாண்டுகளில்  மைலாப்பூர் டேங்க் என்றும் லாங் டேங்க்  என்றும் அழைக்கப்பட்ட பெரிய ஏரியின் கிழக்குக் கரையிலும், மௌபரீஸ் சாலைப் பகுதியில் அகழப்பட்ட கிணற்றிலும் கடல் சிப்பிகள் கண்டறியப்பட்டன.”(மைலாப்பூர் டேங்க் எங்கே இருந்தது என்பதை படம் காட்டுகிறது.).

“அடுத்து, கடற்கரைக்கு மூன்று கி.மீ. மேற்கேயிருந்த ‘கர்னல் மார்ஷல்’ அவர்களின் தோட்டத்தில்கிணறு தோண்டியபோது ஐந்து அடி ஆழத்திலேயே கடற் சிப்பிகள் தென்பட்டன”.

“தொடர்ந்து, திருமயிலை தெப்பக்குளம்,  செனோடாப் சாலையில் (இன்றைய டி.டி.கே. சாலை) இருந்த Mr. ‘Ainsle’ யின் இல்லம், மௌபரிஸ் சாலை இங்கெல்லாம் வெட்டப்பட்ட கிணறுகளிலும் நிறைய கடற்சிப்பிகள் கிடைத்தன.“

     “BRODIE’S ROAD  இல் உள்ள PAGODA TANK  இலிருந்து ஒன்றரை மைல் தெற்கே உள்ள கிணறு (இங்கே BRODIE’S ROAD எனக் குறிப்பிடப்படுவது இன்றைய இராமகிருஷ்ண மடம் சாலை; PAGODA TANK  என்பது மயிலை தெப்பக்குளம்), மன்றோபாலம் இங்கெல்லாம் வெட்டப்பட்டகிணறுகளிலும் கடற்சிப்பிகள் கிடைத்துள்ளன.

இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் இராபர்ட் ப்ருஸ்   ஃபுட்,இன்றைய கடற்கரைக்குமேற்கே எத்தனைக் கி.மீ. தூரம்  வரை கடல் முன்னேறியிருந்தது எனச்  சொல்வதற்கு ஆதாரங்கள்கிடைக்கவில்லை என்கிறார். கடல் சிப்பிகளின் மிச்சங்களைத் தாங்கிய இந்தப் படிவங்கள் உருவானபோது கடல் கிட்டத்தட்ட பல்லாவரம் மலையின் கிழக்கு அடிவாரம் வரை இருந்திருக்கக்கூடும்  எனக் கருதும்  இவர்,     இன்றைய (கிழக்கு) சென்னை அமைந்துள்ள இடம், “வங்கக் கடல் தந்த கொடை” என்று  பதிவு செய்திருக்கிறார்.

புதிய மெட்ராசின் 300 ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட  “THE MADRAS TERCETENARY COMMEMORATION VOLUME” (1939)  எனும் நூலில், “THE SITE AND SITUATION OF MADRAS” எனும் தலைப்பில் உள்ள கட்டுரையில், சென்னையின் நில அமைப்பு பற்றிய பூகோளத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்  காலத்தின் துவக்கத்தில்கூட இந்த நகரம் அமைந்துள்ள பகுதி சதுப்புநிலமாக இருந்தது எனும் தகவல் அதில் கூறப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் அகழப்பட்ட கிணற்றில், 18 அடி ஆழத்தில் 2 அடி கனத்திற்குக் கிடைத்த கருநிற களிமண் படிவங்களில் கிளிஞ்சல் எச்சங்கள் கிடைத்துள்ளன. அப்போது, சென்னை மாநிலக் கல்லூரியின் புவியியல் துணைப் பேராசிரியராக இருந்த P.G.DOWIE  என்பார் இவற்றை ஆய்வு செய்து, இந்தக் கிளிஞ்சல்கள் கடற்கழிகளில் வாழக்கூடியவை என்று கண்டறிந்திருக்கிறார். இவற்றுள் ARCA  எனப்படும் கிளிஞ்சல்/சிப்பி, கடல் வாழ் உயிரினம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். 

சதுப்பு நிலங்களில் புதையுண்ட உயிரினங்கள்  மக்கிப் போகும் போது வெளிப்படும் வாயுக் கசிவுகள், மயிலாப்பூர் வட்டாரங்களில் வெளிப்பட்டன என்றும், இது குறித்த செய்திகள் 1930 களில் ‘தி இந்து’ இதழில்  வெளியானதாகவும் இந்த நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. 

               இது இப்படியிருக்க 1950 களில்,  விருகம்பாக்கம் பகுதியில் வாயுக் கசிவு   ஏற்பட்ட ஒரு  கிணற்றை ஆய்வு செய்த   இந்திய புவியியல் துறை விஞ்ஞானி ஜேகப் குரியன்,அது மீதேன் வாயு என்றும் விருகம்பாக்கம்- வடபழனி பகுதி முன்பு கடலை ஒட்டிய சதுப்பு நிலப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்றும் அறிக்கை அளித்துள்ளார்.

               இந்நிலையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இந்திரா நகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீருக்காகத்  தோண்டப்பட்ட குழாய்க் கிணறுகளிலும் கடல்  களிமண்வெளிப்பட்டது. இன்றைக்கு மயிலை மியூசிக் அகடெமிக்குஎதிரே உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் போடும்போது அதில் களிமண்ணும் மணலும் கலந்திருந்த குழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகஉடைந்த சிப்பித் துண்டுகள் கிடத்தன.

தேனாம்பேட்டையில் உள்ள ஆலையம்மன் கோவிலின் சரியான பெயர் “அலை காத்தஅம்மன் கோவில்” என அறிந்து அங்கு சென்று விசாரித்தேன். முற்காலத்தில் அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது; அந்த ஏரியின் அலைகளில் மிதந்து வந்த அம்மன் சிலைதான் இங்கு வழிபடப்பட்டு வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முதியவர், “ சார், முந்தி கடல் இங்க இருந்திச்சாம், ஒருதடவ அலையெல்லாம்பொங்கி கிராமத்துக்குள்ள வரப்ப இந்த அம்மாதான் ஊர காப்பாத்திச்சாம், அதனாலதான் இந்தஅம்மனுக்கு,  “அலை காத்த அம்மன்’னு பேரு என்றார். ஆனால் இவற்றை முழுமையாக நம்புவதற்கில்லை. 

கடந்த 2017 ஆம்ஆண்டு  சென்னை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ROBERT BRUCE FOOTE பற்றிய ஆவணப் படவெளியீட்டு விழாவில் பங்கேற்ற என் நண்பர் திரு ஸ்ரீநிவாசன் (DEPUTY DIRECTOR GENERAL ( RETIRED,) GSI), (இவர்  சென்னையின் பல இடங்களில் பணி செய்தவர்.) படத்தைப் பார்த்துவிட்டு, தியாகராய நகர் பகுதியில்  MARINE SAND மற்றும் வடபழனி பகுதியில் MAERINE CLAY கிடைத்ததாகத் தெரிவித்தார். மேற்கு சென்னையில், பாடி பகுதியில் அகழப்பட்ட கிணறுகளிலும் உடைந்த சிப்பிகள் தாங்கிய கரிய நிற களிமண் கிடைத்திருக்கிறது..

அண்மையில் சென்னைப் பகுதியின் பழைய வரைபடம் ஒன்றைப் பார்த்தேன்.(1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது).அதில் அந்நாளில்  இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ள பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் ஏரி ஒன்று இருப்பது தெரிய வந்தது. வடக்கு-தெற்காக இருந்த அந்த ஏரியின் அமைப்பு, அது கடல் பின் வாங்கியபோது விட்டுச் செல்லப்பட்ட நீர்ப் பகுதியோ என எண்ணத்தூண்டியது.அண்ணா பல்கலைக் கழகத்தை ஒட்டி கிழக்கேயுள்ள கல்வி நிலையங்களில் புதிய  கட்டிடங்கள் கட்ட கடைக்கால் போட்டபோது கடல் சிப்பி ஓடுகள் கிடைத்ததாக அங்கு பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

படம்: 1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைபடம்.

அண்மையில், இந்தச்  செய்திகளை ஃபேஸ் புக்கில் பதிவு செய்தேன். இதைப் பார்த்துவிட்டு, சிந்தாதிரிப்பேட்டை, தியாகராய நகர் போன்ற பகுதிகளில் உள்ள நண்பர்கள், அவர்கள் பகுதியில் அகழப்பட்ட கிணறுகளிலும் கிளிஞ்சல் துண்டுகள் கிடைத்ததாகத்  தெரிவித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது,

“ THE WHOLE OF MADRAS APPEARS TO BE BUILT ON SUCH BEDS WHICH HAVE BEEN LAID OPEN AT VARIOUS PLACES IN THE EXCAVATION OF WELLS “

என்று ப்ருஸ் ஃபுட் எழுதியுள்ளது சரியென்றே தோன்றுகிறது..இங்கே such beds என்று அவர் கூறுவது, “ BEDS ABOUNDING IN THE REMAINS OF MARINE AND ESTURINE SHELLS OF LIVING SPECIES”.

இந்திய புவியியல் துறை ஆய்வுகளின்படி, பெசன்ட் நகர், அடையாறு, கிழக்குசைதை,நந்தனம்,மயிலை,மந்தைவெளி,திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், கிழக்கு அசோக்நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புரசை, சௌகார் பேட்டை, இராயபுரம், வண்ணாரப்பேட்டை, தொண்டயார்பேட்டை போன்ற பகுதிகளில் கடல்சார் வண்டல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் உத்தேசமாக உருவாக்கப்பட்ட வரைபடத்தை இத்துடன் இணைத்துள்ளேன். கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில்  வங்கக்கடல் பின் வாங்கியதால்தான் இந்த நிலப்பரப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

ஆம்,வங்கக் கடல் தந்த கொடைதான் நம்ம சென்னை.

  1. Robert Bruce Foote: MEMOIRS OF THE GEOLOGICAL SURVEY OF INDIA, VOLUME X (1873). PP 20 – 25.
  2.  
  3. Thirunaranan: THE SITE AND SITUATION OF MADRAS, THE MADRAS TERCETENARY COMMEMORATION VOLUME (1939)



You may also like

Leave a Comment