Home Article மெரீனா கடற்கரை

மெரீனா கடற்கரை

by Dr.K.Subashini
0 commentசிங்காநெஞ்சன்

தோற்றமும் வளர்ச்சியும்  

இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில் இறக்கத்தைக் கடல் அலைகள் கழுவிச் சென்றன

1870 ஆம் ஆண்டில் கோட்டை வாயிலிலிருந்து கோடு போட்டதுபோல் நீண்டு கிடந்த கடற்கரையைக் கண்ட வெள்ளை அதிகாரி MOUNTSTAURT ELPHINSTONE GRANT DUFF, அதன் மேல் காதல் கொண்டார். பத்தாண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்து கவர்னராக பொறுப்பேற்றபோது, அவர் செயலில் இறங்கினார்.

அந்தச்  சமயத்தில் கடற்கரையானது  களிமண்ணால் அப்பிக் கிடந்தது. சில நூற்றாண்டுகளாகவே பின் நோக்கிச் சென்று கொண்டிருந்த கடல், பழைய கடற்கரையை மேற்கே விட்டு வந்திருந்தது அந்தப்  பழைய கடற்கரையின் பழைய மணல்மேடுகள், கோட்டைக்குத் தெற்கேக்  கூவம் ஆற்றிற்கும் மாநிலக் கல்லூரிக்கும் இடையே நீண்டு கிடந்தன. அந்த மணலினைக்  களிமண் பரப்பில் நிரப்பி, மணல்மேடுகளைத்  தட்டையாக்கி, உலா செல்ல பாதை (PROMENADE) ஒன்றை அமைத்தார் அவர்.

1881 இல் அமைக்கப்பட்ட இந்த உலாப்பாதை (CUPID’S BOW) 1884 இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது.இந்தக் கடற்கரைக்கு மெரீனா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். மெரீனா ஷேக்ஸ்பியரின் PERICLES நாடகத்தில் வரும் இளவரசி. கடலில் பிறந்தவள். மெரீனா வளரத் துவங்கினாள், மெரீனா இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு முக்கியக்  காரணம் அருகில் அமைந்துள்ள துறைமுகமே.

கிழக்கிந்தியக்கம்பனியினர் பதினேழாம் நூற்றாண்டின் இடையிலேயே தங்கள் வணிகத்தைத் துவங்கியபோதும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரையில் துறைமுகத்தை மேம்படுத்தாதது வியப்பான விஷயமே. கரைப் பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் கப்பல்கள் கரையிலிருந்து ஒரு கி.மீ. தூரம் தள்ளியே நின்றன. படகுகள், கட்டுமரங்கள் மூலமாகவே கரையிலிருந்து கப்பலுக்குச் சரக்கை ஏற்றிச் செல்வதும், அங்கிருந்து இறக்கி வருவதும் நடந்தன. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததால் வர்த்தக சங்கமும் கம்பனியும் சேர்ந்து துறைமுகத்தை மேம்படுத்த ஆரம்பித்தனர். சரக்குப் பாலங்கள்(piers) அமைக்கப்பட்டன.துறைமுகப் பகுதியில் அலைகளின் தாக்கத்தைக் குறைக்க நெடுக்குச் சுவர்களும், மணல் சேர்வதைத் தடுக்க குறுக்குச்  சுவர்களும் கட்டப்பட்டன (GROINS AND BREAK WATERS). புதிய துறைமுகம் 1881இல் செயல்பாட்டிற்கு வந்தது. இதே ஆண்டில்தான் கடற்கரை சீரமைக்கப்பட்டு மெரீனா எனப் பெயரிடப்பட்டது.

துறைமுகக் கட்டுமானங்கள் விளைவாக, கடலோரத்தில் வடக்கு நோக்கிச் செல்லும் நீரோட்டங்கள் தடுக்கப்பட்டன. அந்த நீரோட்டங்கள் சுமந்து வந்த மணல் அங்கேயே தங்கி, அலைகளால் அடித்து வரப்பட்டுக் கரையில் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் accretion என்கிறோம். மெல்ல மெல்ல மெரீனாவின் மணற்பாங்கான கடற்கரை (SANDY BEACH) வளரத் துவங்கியது. ஆண்டுகள் கடந்தன. சில மீட்டர் . அகலமே இருந்த மெரீனா கடற்கரை இன்று சராசரியாக முந்நூறு மீட்டர் அகலத்திற்குப் பரந்திருக்கிறது. (அதிகபட்ச அகலம் 437 மீ.).

அதே சமயம் , இதன் எதிர் விளைவாக, துறைமுகத்திற்கு வடக்கே உள்ள ராயபுரம்—காசிமேடு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. துறைமுகத்திற்குத் தெற்கே சுமையை இறக்கிய நீரோட்டங்கள் புதிய வேகத்துடன் துறைமுகத்தை சுற்றிச் சென்று ராயபுரம்—காசிமேடு பகுதிகளில் பெரும் நில அரிப்பை ஏற்படுத்துகின்றன.

 பல்கலைக்கழக வளாகம் எதிரே பரந்திருக்கும் கடற்கரை, தெற்கே வர வரக் குறைந்து அடையாறு அருகே இயல்புநிலை அடைகிறது.

இனி, இன்று இப்படி இருக்கும் கடற்கரை பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது?

கடற்கரையில் புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் இருந்தன. ஊர்ந்து வரும் அலைகள் அங்கே உலாவிச் சென்றன. அலைகளில் அடித்துவரப்பட்ட முத்தும் பவளமும் அங்கே விரவிக் கிடந்தன. திருஞான சம்பந்தரும், திருமழிசை ஆழ்வாரும் அப்படித்தான் சொல்கிறார்கள்.

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”(சம்பந்தர்)

“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்…(சம்பந்தர்)

.

வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம்

அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்

திருவல்லிக்கேணியான் சென்று “(திருமழிசை ஆழ்வார்)

‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா

அல்லிக் கேணியான்’ (திருமழிசை ஆழ்வார்).You may also like

Leave a Comment