Home Article காலனி ஆட்சியில் தமிழ்

காலனி ஆட்சியில் தமிழ்

by Dr.K.Subashini
0 comment

கே. ஆர். ஏ. நரசய்யா

(இப்பதிவு, 1700 ஆம் ஆண்டிற்குப் பின்னர் Age of Exploration என்றறியப்பட்ட கால கட்டத்தில் தமிழ் மொழி வளர்ந்த விதத்தை ஆராய்கிறது. அதற்கு முக்கியமாக இரு காரணங்கள். அப்போதைய கத்தோலிக்க போப் தனது பேபல் புல் என்ற ஆணையால், தமக்குள் பொறாமை கொண்டிருந்த ஸ்பெயின்,போர்ச்சுகீசிய நாட்டினருக்கிடையில், (அவர்கள் இருநாட்டினரும் கத்தோலிக்கர்கள் என்பதால்), சமரசம் செய்ய முன்வந்து, உலகத்தை வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை அசோரஸ் என்னும் தீவு வழியாக இரண்டாகப் பிரித்து, மேற்குப் பாகத்தை ஸ்பெயினுக்கும் கிழக்குப் பகுதியை போர்த்துகீசியருக்கும் அளித்தார்! வேடிக்கை என்னவெனில் அவருக்குச் சொந்தமில்லாத இடத்தை அவர் பகுத்துத் தந்தது தான்! அன்றைய நிலையில் வணிகத்திலும் கலாசாரத்திலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த நாடாக அதுவரை இருந்திருந்தும், இந்தியா உள்நாட்டுப் பூசல்களாலும், அன்றைய அரசர்களின் சுகபோக வாழ்க்கையினாலும் ஒற்றுமையின்றி இருந்தது. தென்னகத்திலும் சேர சோழ பாண்டியர்கள் ஒற்றுமையின்மையாலும் பொறாமை கலந்த போட்டிகளாலும் அரசியல் நிலைமை திடமின்றி மாற்றார்களுக்கு வரவேற்பு தருவது போல இருந்தது. போர்த்துகீசியர்கள் ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் சிலுவையுடன் தான் மற்ற நாடுகளை அணுகினர். அவ்வாறு முதலில் வந்த வாஸ்கோ டி காமா (மே 22, 1498) இத்துணைக் கண்டத்தின் விதியை மாற்றிவிட்டதாகச் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இந்த நிலையிலும் கூட தமிழ் மொழி எவ்வாறு வளர்ந்தது என்பது முதல் தேடுதல்; இரண்டாவது அவ்வாறு தமிழை வளர்த்தவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்ளவேண்டும்; இக்கட்டுரை இவற்றைத் தான் ஆராய்ந்து எழுதப் படுகிறது. இந்த ஆய்வில் 1947க்குப் பிறகான மொழி வளர்ச்சி எடுத்துக் கொள்ளப்ப்டவில்லை. அதே போல காலனி காலத்து எல்லா தமிழறிஞர்களையும் முழுமையாகக் காட்டியுள்ளதாகவும் சொல்ல முடியாது. காலனி ஆட்சியின் போது நடந்த மொழிவளர்த் தேடலின் கதையை மட்டுமே நோக்கும் பதிவாகும். அதே போல அரசியல் எழுத்துகளும், கருத்துகளும் இக்கட்டுரையில் இடம் பெறவில்லை. மற்ற தனிப்பட்ட கருதுகளும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் நான் எடுத்துக் கொண்ட முக்கிய ஆய்வுப் பகுதி அவற்றால் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதுதான்)

மேலைநாட்டினரின் வணிகவழித் தேடலின் போது, அதாவது பதினைந்தாம் நூற்றாண்டில், உலகமே வணிக அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மாறிவிட்டது, ஆகையால் அந்தத் தாக்கத்தில் இந்தியத்துணைக்கண்டமும் தப்பவில்லை. அரசியல்ரீதியான அதீத மாறுதல்களால் நாடு கலாசார சமுதாய வழிகளிலும் மாற்றங்களைக் கண்டது. 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், முக்கியமாக மதமாற்றங்களால், அதிக மாறுதல்களைக் கண்டது தென்னகம் தான்.  

அதற்கு முன்னரே கோவாவில் தொடங்கி, கேரள மாநிலம் வழியாக கத்தோலிக்க கிறிஸ்துவ மதப்பரப்புதலையேத் தமது தலையாயக் கடமையாகக் கொண்ட போர்த்துகீசியர், தூத்துக்குடி பரதவர் மூலமாக மத மாற்றமுயற்சிகளை மேற்கொண்டனர். அதற்கு முதல் துணையாகத் தமிழைக் கற்று அம்மொழி மூலமாக மத,மாற்றத்தில் முனைந்தபோது, அவர்களால் தமிழ் வளரவும் செய்தது. இம்முயற்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாதிரி ஹெண்ட்ரிக்ஸ் என்பவர். முக்கியமாக அச்சடித்தலும் எழுத்துருக்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. பின்னர் வந்த மதபோதகர்களில் ஒருவரான ராபர்ட் டி நோபிளி (1577-1656) இந்து மதத்துறவியைப் போல உடையுடுத்தி பிராமண அறிஞர் போல நடந்து கொண்டு மதப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இவரும் தமிழை நன்கு கற்றறிந்து மத போதக நூல்களைப் பிரசுரித்தார். இவர்தான் முதன் முதலாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்து, அம்மொழியில் பல நூல்களையும் இயற்றிய மேனாட்டுக் காரராகும்.

 இவ்வகையான மத மாற்றங்களைத் தடுக்க, சைவ நெறிசார்ந்த மடங்களும் மடாதிபதிகளும் தமிழையும் சைவத்தையும் காக்க வேண்டிய முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். முக்கியமாக, திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள், மற்றும் குன்றக்குடி ஆதீனங்கள் சைவத்தையும் மற்றும் தமிழ் தூய்மையையும் காக்கவேண்டிய நிர்ப்பந்தத்தைக் கண்டனர். இம்முயற்சி தமிழ் வளர்ச்சிக்கு ஒரு மாபெரும் உந்துகோலாக இருந்தது. மிகச் சிறந்த தமிழறிஞரும் தமிழ்த்தாத்தா உ. வே. சு அய்யரவர்களின் ஆசிரியருமான மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்(1815-1876) இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்ட மடத்தில் இருந்தார். திருச்சி அருகே 1815இல் பிறந்த பிள்ளையவர்கள், தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே முதலில் தமிழ் கற்றார். பின்னர் சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் போன்ற தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். முறையாக காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சேர்ந்த இவருக்கு அம்பலவாண தேசிகர் மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்து மடத்துத் தலைமைப் புலவராக ஏற்றுக் கொண்டார். தமிழுக்குத் தொண்டாற்றிய பலரும் இவரிடம் கற்றவர்களே. 

தொடக்கத்துத் தமிழறிஞர்களில் பெரிதும் அறியப்பட்டவர் மயிலேறும் பெருமாள் பிள்ளை (1670) ஆவார். இவர் கல்லாடம் என்ற நூலுக்கு விளக்கமெழுதியவர் மட்டுமின்றி, சிறந்த தமிழறிஞர்களான, சுவாமிநாத தேசிகர் (இலக்கணக் கொத்து ஆசிரியர்) போன்றோருக்கு ஆசிரியராகவும் இருந்தவர். 1680ல் இலக்கண விளக்கம் எழுதிய திருவாரூரைச் சேர்ந்த வைத்யநாததேசிகரும், 1680ல் எழுதப்பட்ட பிரயோக விவேகம் ஆசிரியர் குருக்கூர் சுப்பிரமணிய தீட்சிதரும், 1700ல் நன்னூலுக்கு விளக்கமெழுதிய சங்கர நமசிவாய புலவரும் பிள்ளையவர்களின் மாணாக்கர்கள்.

ஆகையால் பதினெட்டாம் நூற்றாண்டு, பக்தி மூலமாக, மொழியையும் கலாசாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, தமிழ் மொழி மறுமலர்ச்சி பெற்று நல்ல வளர்ச்சியும் பெற்றது. தமது மதத்தைப் பரப்பவேண்டித் தமிழைக் கற்ற சில ஐரோப்பிய மதபோதகர்கள் தன்னிச்சையாக தமிழை நேசித்துக் கற்றதும் அம்மொழியில் எழுதத் தொடங்கியதும் தமிழ் வளர பெரும் ஆதரவைப் பெற்றது.

இரண்டாவது பக்தி இலக்கிய முயற்சி இப்போது உண்டாகியது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்தது போல இப்போது ஒரு உந்துதல் ஏற்பட்டது. சமண பௌத்த மதத் தாக்கலின் போது ஏற்பட்ட முதல் பக்தி இலக்கிய காலம் போல இப்போது மற்ற மதத் தாக்குதல்களுக்கு எதிராக ஏற்பட்டிருக்கலாம். அவ்வகையில் தமிழுக்கு ஒரு பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

இராமநாடகக் கீர்த்தனைகள் என்ற இசைக் காவியம்.இயற்றிய அருணாசலக் கவிராயரும் (1711-1779) அக்காலத்தில் தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். இவரது மற்ற படைப்புகள் சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சீர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன. தமிழுக்கு இவ்வகையிலான சேர்மானங்கள் வளர்ச்சியை ஈந்தன.

. அருணாசலக் கவிராயர் தமது இராமநாடகக் கீர்த்தனைகளை வெளியிட தஞ்சாவூர் அரசரை நாடினார். ஆனால் அரசியல் காரணங்களால் அது நடக்க முடியாமற்போகவே புதுச்சேரியின் ஆனந்தரங்கம் பிள்ளையின் உதவி வேண்டினார். ஆனால் அவரோ இப்பெரும் நூலை வெளியிடத் தகுதிபெற்றவர் சிறந்தவர் அன்றைய மதராசில் இருந்த துபாஷி மணலி முத்துகிருஷ்ண முதலியாரே எனக் கூற கவிராயர் முதலியாரை அணுகினார். சிறந்த முறையில் முதலியார் கவிராயரைக் கௌரவித்தார். இதைப் பற்றி கவிராயர் கூறியது:

  • கனம் தந்தான் கனகா பிஷேகந் தந்தான்
  • களங்கம் இல்லாக் கருப்பொருளை  அழைத்துத் தந்தான்
  • ..
  • எனைராமா யணக்கவிஞன் எனப்பேர் தந்தான்
  • அனந்தந்தான் மணலி முத்து கிருஷ்ண பூபன்
  • அகம் தந்தான் இருமையிலும் சுகந்தந் தானே!

அவ்வகையில் பொருள் வளம் செறிந்த பல துபாஷிகளும் தமிழ் வளர்ச்சிக்குப் பொருளாலும் கருணையினாலும் உதவினர்.

   மற்றொரு சிறந்ததமிழாசிரியர், இராமானுஜக் கவிராயர் (1780-1853). பல மேலைநாட்டினர் இவரிடம்தான் 1820 லிருந்து தமிழ் பயின்றனர். அவர்களுள் சிறந்த மேனாட்டுத் தமிழறிஞர் ஜார்ஜ் உக்ளோ போப் (1820 – 1908)ஆவார். கிறிஸ்துவ மதப்போதகராகத் தமிழ் கற்றாலும் மொழிவளத்தால் தமிழின்பால் அவரது ஆர்வம் அதிகமாயிற்று. ராமானுஜக் கவிராயரோ தீவிர வைணவர். அவர் 1820ல் அன்றைய மதராஸ் வந்தபோது அவரது முக்கிய ஒரே நோக்கம் தமிழ் வளர்ச்சியே. இலக்கணக் கடல் என்றும் இயற்றமிழாசிரியர் என்றுமறியப்பட்ட கவிராயர் பல தமிழறிஞர்களுக்கு ஆசிரியராகவுமிருந்தார். தமிழ்ப் புலவர்களாகிய சரவணப் பெருமாளய்யர், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் விசாகப் பெருமாளைய்யர் இவரிடம் கற்றவர்களே! விசாகப் பெருமாளைய்யர் மெட்ராஸ் பலக்லைக் கழகத்து தமிழ் பிரிவு தலைவராகவும் இருந்தவர்.

போப்பைப் போல கவிராயரிடம் தமிழ் கற்ற மேனாட்டு அறிஞர்கள் மிரான் வின்ஸ்லோ(1789-1864), டபிள்யூ. ஹெச். ட்ரூ, மற்றும் ரெவரண்ட் சி. டி. இ ரீனியஸ் ஆவர், இவர்களில் வின்ஸ்லோ முதலில் அமெரிக்கன் சிலோன் மிஷனிலும் பின்னர் மெட்ராஸ் மிஷ்னிலும் இருந்தபோது A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil, என்ற நூல் இயற்றியவர். ஆகையால் இவர் அவ்வகராதி தயாரிக்கையில் கவிராயர் உதவியைநாடினார்.

ஜி. யு. போப் பிற்காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து 1866ல் கவிராயரைப் பற்றிக் கூறுகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“My first teacher of Tamil (Ramanuja Kavirayar), was a most learned scholar long dead (peace to his ashes) who possessed more than any man I have known the cleverness ingenium perfervidum. He was a profound and zealous Vaishnavite. I remarked one day about a long white line or scar on his neck, where his rosary of eleocarpus beads are hung and ventured  to ask him (I had to wait for the mollia temporafend ) its history.

“Well said he, ‘When I was a boy I could learn nothing. Nothing was clear to me and I could remember nothing. But I felt my whole soul full of intrense love of learning. So in despair I went to a temple of Sarswathi (the Goddess of Learning) and with a passionate prayer, I cut my throat  and fell bleeding at her feet. In a vision she appeared to me and promised I should become the greatest of Tamil scholars. I recovered, and from that day, by Her Grace, I found all things easy and I am what She said I should be. I believe he was so and from that noble, enthusiastic teacher I learned to love Tamil and to rever its ancient professors.”

   அக்காலத்து மற்ற சிறந்த தமிழ் அறிஞர்களுள் அதிகம் அறியப்பட்டவர்கள்; தாண்டவராய முதலியார், காஞ்சீபுரம் சபாபதி முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், மற்றும் எக்மோர் திருவெங்கடாசல முதலியார் போன்றவர்கள்.

   அச்சு முறையும் நூல் வெளியீட்டு முறையும் புழக்கத்தில் வந்த போது இவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு அவற்றைப் பிரதானமாக ஏற்றுக்கொண்டனர். பார்த்தலோமியோ சீகன்பால்க் அச்சு முறையை இரண்டாவது முறையாக புதுச்சேரியில் அறிமுகப்படுத்தியதின் விளைவாக தமிழ் முறையாக இப்போது அச்சேறியது. முதலில் தென்னகத்தில் கத்தோலிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் விளைவு தமிழார்வலர்களுக்கு அப்போது எட்டவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலச்சகம், பாண்டியிலிருந்து ஆங்கிலேயரின் வெற்றியின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட வேப்பேரியில் சொசைடி ஆஃப் ப்ரமோடிங் கிறிஸ்டியன் நாலெட்ஜ் என்ற கிறிஸ்துவ மதஸ்தாபனத்தினதேயாகும். ஜான் பிலிப் ஃபேப்ரிகஸ் என்பவர் தான்  இவ்வச்சு இய்ந்திரத்தை வைத்து நடத்தி வந்தார். இங்குதான் 1779 ல் A Malabar and English Dictionary என்ற 9000 வார்த்தைகள் கொண்ட ஆங்கில தமிழகராதி ஃபேப்ரிகஸால் தயாரிக்கப்பட்டதும் முதன் முதலில் அச்சேற்றப்பட்டதுமாகும். அதன் தலைப்பு தமிழும் இங்கிலேசுமாயிருக்கிற அகராதி என்பதாகும். தமிழ் அப்போது மலபார் மொழி என்றே அறியப்பட்டது.   வேடிக்கை என்னவெனில், இந்த அகராதியைத் தயாரிக்கையில் அம்மனிதர் சிறையில், தம்மால் திரும்பித் தர இயலாத கடனால் அடைக்கப்பட்டிருந்தார். இந்த அகராதியால் கிடைத்த பொருளால்தான் அவரால் தமது கடனை அடைத்து விடுதலையும் பெற முடிந்தது. 1793 ல் ஜான் பன்யனின் Pilgrim’s Progress என்ற நூலும் இங்குதான் அச்சிடப்ப்பட்டது. அதன் தமிழ்த் தலைப்பு, ஒரு பரதேசியின் இந்த லோகத்தை விட்டு மறுமைக்கு நடந்தேறினது சொற்பனமென்ற உகமையில் காண்பிக்கப் பட்டிருக்குது. இந்த அச்சகம் 1761லிருந்து கம்பெனியின் தஸ்தாவேஜுகளையும் அரசாணைகளையும் அச்சிடப் பயன் படுத்தப் பட்டது.

   தரங்கம்பாடி மிஷன் அச்சகத்தில் முதன் முதலாக மதச் சார்பில்லாத நூல்களும் 1715 லிருந்து 1719 வரை அச்சிடப்பட்டன. முக்கியமாக Tamil Expositor என்றசொல்லடைவுகளும் சொற்றொடர்களும் (Tamil Idioms and Phrases) கொண்ட 92 பக்க நூலொன்று இங்கு 1811ல் அச்சிடப்பட்டது.

                சஞ்சிகை என்றறியப்பட்ட மாத வார இதழ்கள் வெளியிடுதல், முதன் முதலாக 1831 ஆம் ஆண்டில் ராஜவிருத்தி போதினி என்ற இதழுடன் தொடங்கியது. இது மதபோதகர்களால், மதப் பரப்புதலுக்கும் மதமாற்றங்களுக்காகவும் ரிலிஜஸ் ட்ராக் சொசைடி என்ற அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது. அதே பெயரில் அதற்காக ஒரு அச்சகமும் தொடங்கப்பட்டது. அதற்குப் போட்டியாக மற்றொரு கிறிஸ்துவ சஞ்சிகை தின வர்த்தாமானி என்ற பெயரில் ரெவரண்ட் பெர்சிவால் என்பவரால் தொடங்கப்பட்டது. பெர்சிவால் சம்ஸ்கிருதத்தை 1856ல் பிரெசிடென்சி கல்லூரியில் முறையாகக் கற்றவர். ஆறுமுக நாவலரிடம் தமிழ் பயின்றவர். அவர் இச்சஞ்சிகையில்வந்த கட்டுரைகளைத்தொகுத்து, வினோத ரச மஞ்சரி என்ற் பெயரில் வெளியிட்டார்.              ஆகையால் ஒரு வகையில் மதப் பரப்பினாலும் தமிழ் வளர முடிந்தது.

   தமிழ் வெளியீட்டாளர்களாக வந்தவர்களில் முன்னோடிகள், புதுவை நாயனப்ப முதலியார்(1779-1840), முகவை ராமானுஜக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார்(1795-1852) (முன்னரே கூறப்பட்டவர்கள்) மற்றும் வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார் போன்றோர். இவர்களுக்குள் அதிகம் அறியப்பட்டவர் கே. நமசிவாய முதலியார்(1876-1931). இவர்தான் முதலில் சிறந்த தமிழுருக்களை நெல்சன் டைப் ஃபவுண்டரியில் அறிமுகப்ப்டுத்தியவர். அவ்வுருக்கள் நமசிவாய உருக்கள் (Namasivaya Fonts) என்றறியப்பட்டன. பெண்களுக்கான நூல்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவரும் இவரே. அது மேரி ராணி வரிசை என்றறியப்பட்டது.

   பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (1777- 1819) தான் ஆங்கில அதிகாரிகளுள் தமிழுக்கு அதிகம் உழைத்தவர். அவர் ஏற்படுத்திய அச்சகத்தில் நல்ல தமிழை வளர்க்கப் பாடுபட்டார். நன்கு தமிழ் கற்று திருக்குறளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி பகுதி முடித்த பின்னர் அப்பணி முடியுமுன்னரே காலமானவர். இவர் முயற்சியின் மூலமாகத்தான் திராவிட மொழிகள் வடமொழிகளிலிருந்து மாறுபட்டவை என்றும் தமிழ் மிகவும் பழமை வாய்ந்ததென்பதையும் உலகமறிய முடிந்தது.

   கல்கத்தாவிலிருந்த வில்லியம் ஜோன்ஸ் எல்லா இந்திய மொழிகளும் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என நம்பினர். ஆனால் தமிழும் மற்றத் தென்னகத்து மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தில் தோன்றியவை என்றும் அவற்றில் தமிழ் மிகப் பழமையானது என்றும் நிரூபித்தவர் பிரான்சிஸ் வைட் எல்லிஸ். அவர் அலெக்சாண்டர் கேம்பெல் என்ற ஆங்கிலேயர் 1816ல் எழுதிய A Grammar of Teloogoo language என்ற நூலுக்கு முன்னுரை எழுதியபோது  இது பற்றி விவரித்துள்ளார்.

எல்லிஸ் துரையின் காலேஜ் ஆஃப் செண்ட் ஜார்ஜ் தான் முதன் முதலாக மதவிஷயம் இல்லாத நூல்களை வெளியிட்டது. இங்கு பல இலக்கியப் படைப்புகள் தமிழிலும் தெலுங்கிலும் நூல்களாக அச்சிடப்பட்டன.  அங்கு முறையாக மொழி பயின்றவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவ்வாறு அங்கு பணி புரிந்தவர்களில் சிறப்பானவர்கள் தமிழ்ப் பண்டிதர் சிதம்பரப் பண்டாரமும், தெலுங்குப் பண்டிதர் கே. குருமூர்த்தியும் ஆவர். இலக்கண நூலகளும் அகராதிகளும் விஞ்ஞான நூலகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. மெட்ராஸ் ஸ்கூல் புக் சொசைடி என்ற அமைப்பும் இங்குதான் 1819ல் தொடங்கப்பட்டது. இதற்குப் பின்னர் இக்கல்லூரிக்கு ஊக்கமளித்தவர் சர் தாமஸ் மன்ரோ ஆவார். இங்கு 60,000 வார்த்தைகள் கொண்ட வின்ஸ்லோ அகராதி 1862ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது.  இவ்வகராதிப் பணி யாழ்ப்பாணத்தில் பீட்டர் பெர்சிவாலால் தொடங்கப்பட்டு, அவராலேயே மெட்ராசில், தொடரப்பட்டு, சாமுவே ஹட்சிங்க்ஸ், மற்றும் சிலரால் 1862ல் முடிவு பெற்றது.

   எல்லிஸ் துரைக்கு உதவிய மற்றவர்கள் போர்ட் ஆஃப் சூபெரிண்டெண்டென்ஸ் அங்கத்தினர்களும் அதன் காரியதரிசியான தெலுங்கு இலக்கண நூலெழுதிய அலெக்சாண்டர் ட்ங்கன் கேம்பெல்லும் ஆவர். தமிழுக்கு பண்டாரம் சிதம்பர வாத்தியாரும், சமஸ்கிருதத்திற்கு பட்டாபிராம சாஸ்திரியும் தெலுங்கிற்கு உதயகிரி வெங்கடநாராயண சாஸ்திரியும் சிறப்பாக பணியாற்றியவர்கள்.  இவர்களுள் மிக முக்கியமாக எல்லிஸுடன் உழைத்தவர் சங்கரய்யா என்ற சங்கர சாஸ்திரி ஆவார்.

   மற்றொரு சிறந்த ஆங்கில அதிகாரி, காலின் மெக்கின்சி (1754-1821) என்பவர். இவர், அன்றைய கவர்னர் நேப்பியர் குடும்பத்து அழைப்பின் பேரில் நேப்பியர் குடும்பத்து மூத்தவர்களில் ஒருவரான லாக்ரிதம் கண்டுபிடித்த நேப்பியரின் சரிதையை எழுத வேண்டி அழைத்துவரப் பட்டவர். இந்தியக் கணிதம் குறித்துத் தெரிந்துகொள்ள மதுரை சென்றிருந்த காலின் மெக்கின்சிக்கு அங்கு அவர் கண்ட கையெழுத்துப் பிரதிகளின் மீது நாட்டம் ஏற்பட்டது. ஓலைச் சுவடிகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் வரலாறு பதிவாகி இருப்பதைக் கண்டு அதில் தமது முழு கவனத்தையும் செலுத்தினார். இன்றைய அரசினரின் ஓரியண்டல் மேனுஸ்க்ரிப்ட் நூலகத்தில் (1867 ல் ஸ்தாபிக்கக்ப்பட்டது) உள்ள எல்லா சேகரிப்புகளும் இவரது கைவண்ணத்தில் வந்தவைதான். அங்கு இப்போது 50,000 சுவடிப் பிரதிகளும் 20,000 கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவை ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் விருந்து எனலாம்.

   கோபாலகிருஷ்ண பாரதி (1811-1896) ஒரு தமிழ்ப் புலவர். இவர் நந்தன் சரித்திரத்தை கவிதைகளாக எழுதி பண்ணமைத்து சுலபமாகப் பாடும் வழி செய்தவர். குல வேறுபாடுகளின் குறைகளை எடுத்துக் கூறும் இந்நூல் அக்காலத்தில் ஒரு புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. அப்போதே தொடங்கப்பட்ட தேசீய விடுதலை முயற்சிக்கும் இப்பாடல்கள் பெரிதும் உதவிற்று.

   இதற்கு முன்னர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்.மிக அதிகமான பாடல்களை (16,000) தமது வாழ்நாட்களில் எழுதியவர். ஆனால் பல காரணங்களால் மக்கள் அவற்றை அறிந்து கொள்ள முடியாமலேயே கிடந்தன.   வி. டி. சுப்பிரமணிய பிள்ளை என்ற ஒரு தமிழ் ஆர்வலர் அப்போது ஆங்கில அரசின் கீழ் ஜில்லா முன்சீப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தமது வேலை நிமித்தமாக பல இடங்களுக்குச் செல்கையில் ஓரிடத்தில் சுவடிகள் வடிவில் அருணகிரியாரின் சில பாடல்கள் கிடைத்தன். அவற்றைக் கண்டு, படித்து மகிழ்ந்த பிள்ளையவர்கள், ஊரூராக மற்றவற்றைத் தேடும் செயலை தனது கடமையாக மேற்கொண்டார். சுமார் 1330 பாடலகள் கிடைத்தன. அவற்றை அவர் இரண்டு தொகுதிகளாக 1894 லும் 1901 லும் திருப்புகழ் என்ற தலைப்பில் பதிப்பித்தார். அவரது காலத்திற்குப் பின்னர் அவரது குமாரர் வி. எஸ், செங்கல்வராயப் பிள்ளை இரண்டாவது முறையாக திருப்புகழைப் பதிப்பித்தார். தித்திக்கும் தமிழில் மெட்டமைத்துப் பாடக்கூடிய இப்பாடல்கள் இப்போது மலேசிய அன்பர்கள் முயற்சியால், காலம் சென்ற டெல்லி இராகவன் மேற்பார்வையில் உலகெங்கும் ஒலிக்கின்றன. 

   அதே போல அருட்பிரகாச வள்ளலார் என்றறியப்படும் சிதம்பரம் ராமலிங்க அடிகள் (1823-1874) திருவருட்பா என்ற நூலை இயற்றியுள்ளார். எளிய ஆனால் மிக அழகிய தமிழில் எழுதப்பட்ட இப்பாடல்கள் மக்களிடையில் பெரும் ஆர்வத்தை ஊட்டின. இவர் எழுதிய மற்றொரு நூல் மனுமுறை என்ற மனுநீதிச்சோழனின் வரலாறாகும். மதத்தைத் தாண்டிய சகோதரத்துவம்  இவரால் போதிக்கப்பட்டது. ஜனவரி 30, 1874 அன்று இம்மஹா மனிதர் தமது இல்லத்தில் (மேட்டுக்குப்பம்) ஒரு அறைக்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வருடம் மே மாதம் அதாவது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்வறை திறக்கப்பட்டபோது அங்கு எவரும் இல்லை. இருந்ததற்கான ஆதாரங்கள் கூட இருக்கவில்லை! இவ்விஷயத்தை ஊர்ஜிதம் செய்வது, தென்னாற்காடு ஜில்லா பதிவேடு. அதைப்பதிப்பித்தவர் அன்றைய தென்னாற்காடு கலெக்டர் ஜே. எச் கார்ஸ்டின் (1878) என்பவர்.  

தமிழின் பழமையையும் பெருமையையும் அடையாளங்காட்டவே பிறந்தாற்போலத் தோன்றியவர் தமிழ்த் தாத்தா என்றறியப்பட்ட உ. வே சாமிநாத அய்யரவர்கள். (1855-1942). 1871 ஆம் ஆண்டில் 16 வயது பாலகனாக இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்கச் சென்றார். ஐந்து வருடங்கள் அங்கு பயில்கையில் அவர் பிள்ளையவர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாணவனாக இருந்தார். 1876ல் பிள்ளையவர்கள் காலம் சென்ற பின்னர் தொடர்ந்து தமிழை விரும்பிக் கற்று, 1880ஆம் வருடத்தில், கும்பகோணம் கல்லூரியில் தியாகராஜ செட்டியார் ஓய்வு பெற்ற போது, அங்கு  தமிழாசிரியராகச் சேர்ந்தார். அக்டோபர் 2 1880 ல் அவர் முன்சீப் வேலையிலிருந்த சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார். இச்சந்திப்பு அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.  அவர்தான் முதன் முதலாக அய்யரவர்களுக்கு சீவகசிந்தாமணி என்ற காப்பியத்தின் கையெழுத்துப் பிரதியினைத் தந்தார். அதைத் தமது இல்லத்திற்கு எடுத்துச் சென்று படித்தபோது அய்யரவர்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதாம். அதைப் படித்த போது அய்யரவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் அவரது வாழ்நாள் பூராவும் தொடர்ந்தது. அன்று அவர் ஆரம்பித்த இலக்கியத் தேடுதல் அவர் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது.

தமது வாழ்நாளில் நூற்றுக்கும் மேலான நூல்களை வெளியிட்ட அய்யரவர்கள், சீவக சிந்தாமணியைப் படிக்கையில் அது முற்றிலும் சமணத்தைப் பற்றியது என்று தெரிந்துகொண்டு, அதற்காக வேண்டி சமணத்தைப் பற்றி முதலில் முழுதுமாகத் தெரிந்து கொண்டார். 1887 ஆம் ஆண்டில் சீவக சிந்தாமணி அவருடைய விளக்கவுரையுடன் வெளியிடப்பட்டது. இதனால் உந்துதல் பெற்ற அய்யரவர்கள் சங்ககால இலக்கியங்களைத் தேடுதலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அப்படித்தான் பத்துப் பாட்டு வெளியிடப்பட்டது. இம்முயற்சியின் போது அவர் பல அறிஞர்களைச் சந்திக்கவும் நேர்ந்தது. கிராமங்களெல்லாம் திரிந்து மற்ற சங்க கால இலக்கியங்களைத் தேடுதலைக் கடமையாகக் கொண்டார். சிதம்பரத்து மீனாட்சி கல்லூரியில் சில காலம் தலைவராகப் பணியாற்றிய பின்னர் மீண்டும்தமது தேடுதலில் இறங்கினார். .சென்னையில் தங்கி தமது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அப்போது ஆனந்த விகடனில் தமது சுயசரிதையை தொடர்ந்து எழுதி வந்தார்.இதுதான் தமிழில் வெளிவந்த முதல் சுயசரிதையாகும். மெட்ராஸ் பல்கலைக் கழகமிவருக்கு முனைவர் பட்டம் 1906ல் வழங்கியது. பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் பலவாகும். அவற்றில் முக்கியமானவை மஹாமஹோபாத்யாய, தாக்ஷிணத்ய கலாநிதி ஆகும். ரவீந்திர நாத தாகூர் இவர்மீது வங்க மொழியில் ஒரு கவிதை புனைந்துள்ளர். பாரதியாரும் இவர் மீது கவிதை இயற்றியுள்ளார்.

இலங்கை வாழ் தமிழர், இன்று போல அன்றும் தமிழுக்குத் தொண்டு செய்து வந்திருக்கிறார்கள். அவர்களுள் போற்றக்கூடியவர்கள் பலர்; அம்முறையில் ஆறுமுக நாவலரை நினைவு கூறவேண்டும். யாழ்ப்பாணத்து நல்லூரில் 1822ல் பிறந்த ஆறுமுகம் மாணவனாக சிறந்தமுறையில் அறியப்பட்டார், ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தமையால் ரெவரண்ட் பெர்சிவால் இவரைத் தமிழ்ப் பண்டிதராக ஏற்றுக் கொண்டார். பைபிளின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பினைச் செய்தவர் ஆறுமுகம். சைவத்தில் அதீத பற்று கொண்டிருந்த ஆறுமுகம் திருவாவடுதுறை ஆதீனத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாவலர் என்ற பட்டமும் அளிக்கப் பெற்றார். இலங்கையில் இருந்த போது கந்தபுராணம், பெரிய புராணம் மற்றும் பாரதம் நூல்களைத் தமது எளிய விளக்கங்களுடன் பதிப்பித்தார்.1867 ஆம் ஆண்டு சென்னையில்தொடர்ந்து சைவ நெறிமுறைகளின் மீது விரிவுரைகள் ஆற்றிவந்தார். தமது பணிகளுக்காக ஒரு ஜார்ஜ் டவுனில் அச்சியந்திரசாலையையே நிர்மாணித்து அதில் சைவநெறி நூல்களையும் இதர இந்துமதம் சார்ந்த நூல்களையும் வெளியிட்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். நன்னூலுக்கு விளக்கவுரையும் எழுதினார். பள்ளி மாணவர்களுக்காக எளிய தமிழிலக்கணம் ஒன்றும் எழுதினார். யாழ்ப்பாணத்தில் 1879ல் காலமடைந்தார்.

இலங்கையிலிருந்து தமிழுக்குத் தொண்டாற்ற வந்த மற்றொரு அறிஞர் சி. டபிள்யூ. தாமோதரம் பிள்ளையவர்கள்.(1832–1901) யாழ்ப்பாணத்தில் பிறந்த பிள்ளை சுன்னகம் முத்துக்குமாரசுவாமி பிள்ளையவர்களிடமிருந்து தமிழ் கற்றார். சிலகாலம் ஆசிரியராக இருந்த பிறகு ரெவரண்ட் பெர்சிவால் கேட்டுக் கொண்டதன் விளைவாக, தினவர்த்தமானி என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார்.  பிள்ளை சென்னைக்கு 1854ல் வந்தார். முதலில் கிறிஸ்துவ பதத்தின் மீது ஈடுபாடு இருந்தபோதும், ஆறுமுக நாவலரின் வழிகாட்டலில் சிறந்த சைவ்ராக விளங்கினார். சென்னை பல்கலைக் கழகத்தின் ஆரம்பகாலத்து பட்டதாரிகளில் இவர் ஒருவர் ஆகையால் தமிழ் விரிவுரையாளராக பிரெசிடென்சி கல்லூரியில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். சிலகாலம் கோழிக்கோடிலும் பணி புரிந்த பின்னர். அரசு பணீயில் சென்னையில் சேர்ந்தார். அப்போது சட்டமும் கற்று அதிலும் பெற்றார். 1884ல் ஓய்வு பெற்று கும்பகோணத்தில் வழக்குறைஞராக இருந்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நீதிபதி வேலையும் புரிந்தார். பின்னர் சென்னை திரும்பி அங்கேயே இறுதிவரை இருந்தார். மதராஸ் சுகுண விலாச் சபையின் தலைவராகவும் இருந்தார். திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம் முதலிய நூல்களை அச்சேற்றுதலும் இவர்ரல் தான் நடந்தது. ஆனாலும் இவரது சிறந்த பணி, நச்சினார்க்கினியார் உரையுடன் தொல்காப்பியத்தை தொகுத்தளித்ததாகும்.  அதே போல இறையனார் அகப்பொருளையும், வீர சோழியத்தையும் தொகுத்தளித்தார். இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஏ. வி. சுப்பிரமணிய அய்யர் தமதுTamil studies (1969) என்ற நூலில் பெருமளவில் போற்றியுள்ளார். அக்காலத்தில் அச்சடிப்பதும் பிரசுரிப்பதும் சுலபமான வேலையல்ல; அதற்குப் போதிய ஆதரவும் கிடையாது ஆகையால் பொருளும் கிடையாது. கலித்தொகை அச்சேறியபோது அதன் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டவர் புதுக்கோட்டை திவானாக இருந்த சேஷைய்ய சாஸ்திரி என்பவர். ஹிந்து நாளிதழின் ஆசிரியரும் (ஜி. சுப்பிரமணீய அய்யர்) எம். வீரராகவாச்சாரியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் தொலகாப்பியம் அச்சடிக்கும் செலவை ஏற்றுக் கொண்டு தாமோதரம் பிள்ளைக்கு உதவினர்.

இலங்கை தமிழுக்கு அளித்த மற்றொரு பெருந்தகை, சுவாமி விபுலானந்தர்(1892-1947). இவரது இயற்பெயர் அவரது பெற்றோர்களான சாமித்தம்பியும்,கண்ணம்மை இட்டபடி மயில்வாகனம். இலண்டனின் பலகலைக் கழகத்திலிருந்து விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவ்ர்; ஆனால் இவரது தமிழார்வத்தால்மதுரைச் சங்கம் இவருக்கு பண்டிதர் பட்டமளித்தது. யாழ்நூல் என்ற நூல் தமிழிசையைக் குறித்து விரிவாக இவரால் எழுதப்பட்டது. மற்ற ஒரு சிறந்த நூல் மதங்க சூளாமணி என்பதாகும். இது நாடகக் கலையைப் பற்றியது. மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் 1922 ல் (இங்குதான் இவ பெயர் சுவாமி விபுலானந்தா என்று மாற்றப்பட்டது) சேர்ந்து அம்மடத்தின் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜய்த்தின் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  

வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான கே. நாராயண சிவராஜ பிள்ளை (1879-1941) என்பவர் பல்கலைக்கழகத்தில் அப்போதே புதிதாக நிறுவப்பட்ட தமிழ் ஆய்வுப் பிரிவில் சேர்ந்தார். தமிழ் மொழியியலில் (Study of ancient verbal termination) இவரது சேவை போற்றுதலுக்குரியது. 

தூய தமிழ் என்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரண கர்த்தாவாகவிருந்தவர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார். தமது பெயரையே தூய தமிழில் பரிதிமாற்கலைஞன் என மாற்றிக் கொண்டவர். 1870 ல் மதுரை அருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்த சாஸ்திரி மதுரைக் கல்லுரியில் சபாபதி முதலியார் என்ற தமிழறிஞரிடம் தமிழ் கற்றவர். பின்னர் சென்னை வந்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்தார். தாமோதரம் பிள்ளை சாஸ்திரியாரைப் பற்றித் தெரிந்து கொண்ட போது அக்காலத்தின் முறைப்படி அவரைப் பரீட்சிக்க அழைத்தார். அத்தேர்வில் (வெனிஸ் நகரத்து வணிகன் என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் ஒரு பகுதியைத் தமிழில் எழுதச் சொன்னது) சாஸ்திரியாரின் தமிழ்ப் புலமையைக் கண்டு அதிசயித்து, அவருக்கு திராவிட சாஸ்திரி என்ற பட்டமளித்துக் கௌரவித்தார். சாஸ்திரியார் தான் முதன் முதலாகச் செம்மொழி என்ற வார்த்தையைப் பிர்யோகித்தவர். மதிவாணன் என்று சாஸ்திரியாரால் எழுதப்பட்ட தொடர், பிள்ளையவர்களால் ஞானபோதினி என்ற பத்திரிகையில் 1897ல் வெளியிடப்பட்டது. பின்னர் அது நூலாக 1902ல் வெளிவந்தது. அக்கல்லூரியில் முன்பிருந்த திராவிட பாஷா சங்கம்  என்ற அமைப்புக்கு ஒரு கூட்டம் நடத்தி, நீதிபதி சர். எஸ். சுப்பிரமணிய அய்யர் தலைமையில் மார்ச்சு 5,1899ல் புத்துயிர் கொடுத்தவர் சாஸ்திரியார்.  அக்கல்லூரியில் எஃப். டபிள்யூ. கெல்லட் என்பவர் (வரலாற்றுப் பேராசிரியர்) கல்லூரிக்காக ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அது  ஆங்கிலத்தில்மட்டும் பிரசுரம் செய்யப்பட்டது. ஆனால் சாஸ்திரியாரின் வேண்டுதலினால் தமிழ் ஆக்கங்களும் பிரசுரமாயின. அவர் எழுதிய கலாவதி என்ற நாடகத்தில் (வித்வ மனோரஞ்சனி சபையின் மூலமாக விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஏப்ரல் 1, 1897ல் நடந்தது) அவரே பெண் வேடமணிந்து நடித்தார்.

வின்ஸ்லோ குறித்து முன்னரே கண்டோம்.அவருக்கு இலங்கையில் உதவி செய்தவர்களில் ஒருவர் விசுவநாதன் என்பவர். அவருக்குக் கனகசபை என்றொரு குமாரர் 1855ல் பிறந்தார். இவர் சென்னைக்கு வந்து படித்துப் பட்டம் பெற்று அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்தார்.அப்போது தனது சட்டப் படிப்பையும் முடித்துக் கொண்டார். அவரது பெற்றோர் காலமானபின்னர் ஏக்கமிகுந்த அவர் மனச் சாந்திக்காகத் தமிழில் தனது கவனத்தைச் செலுத்தினார். அஞ்சல் துறையில் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தமையால், பல கிராமங்களுக்குச் செல்கையில்   அங்கு கிடைத்த பனை ஓலைச் சுவடிகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இருபது வருடங்களில் அவர் அவ்வாறு சேகரித்த ஓலைச் சுவடிகளை ஆய்ந்து அப்பாவு பிள்ளை என்ற ஒருவருடன் உதவியுடன் அவற்றைத் தொகுத்து. மொத்த சேகரிப்பையும் உ. வே சா அவர்களிடம் கொடுத்தார். அவ்வப்போது அவர் ஆராய்ந்து தெரிந்து கொண்ட விஷயங்களைஆங்கிலத்தில் Madras Review என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் அவ்வாறு எழுதிவந்தவைத் தொகுத்துப் பின்னர் The Tamils Eighteen Hundred Years Ago, என்ற பெயரில் வெளி வந்தது. இன்றும் இந்நூலாய்வாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.                                                                                                                                                  

மற்றொரு சிறந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை (1891-1956) இவரும் தொழிலால் ஒரு வழக்கறிஞர். இவரும் ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். இவரது சேகரிப்பு கல்கத்தா நேஷனல் நூலகத்திற்கு அளிக்கப்பட்டது. மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, சென்னைப் பலகலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு தமிழ் நிகண்டு தயாரிப்பதில் தமது முழு கவனத்தையும் செலுத்தினார். அதற்கு அவர் தான் தொகுப்பாசிரிசயர். இப்பணி 1936ல்முடிவுற்றது. ஒரு இலட்சத்திற்கும் மேலான வார்த்தைகளக் கொண்ட் இந்த 4,000 பக்க அகராதி தயாரிக்க 10 (1926-36) ஆண்டுகள் ஆயின. இவருக்கு ராவ் பஹதூர் பட்டம் 1946ல் வழங்கப்பட்டது.

இன்று எல்லா அரசினர் நிகழ்வுகளிலும் ஒலிக்கும் தமிழ்த் தாய் வாழ்த்து (நாட்டுப் பண்) எழுதியவர் மனோன்மணீயம் பி. சுந்தரம் பிள்ளை (1855-1897)என்பவர். மனோன்மணியம் என்ற நாடகக் கவிதையை எழுதியவர். ஆங்கிலத்திலும்  தமிழிலும் புலமை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை ஆங்கிலத்தில்  சங்கநூல்கள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். இவர் எழுதிய 4500 வரிகளுக்கும் அதிகமான மனோன்மணீயம் 1891ல் பதிப்பிக்கப்பட்டது.  

தூயதமிழுக்காகச் சேவை செய்த மற்றிரு அறிஞர் சுவாமி வேதாசலம் என்ற இயற்பெயர் கொண்ட மறைமலை அடிகள். பரிதிமாற் கலஞனைப் போல இவரும் தமது பெயரைத் தமிழில் மாற்றிக் கொண்டார். நாகப்பட்டினத்து வெஸ்லி மிஷன் பள்ளியில் படித்த அடிகள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். ஆனால் தந்த்தையார் மறைந்த போது ஒன்பதாவது வகுப்பிலேயே படிப்பு முடிந்து விட்டது.  சமஸ்கிருதத்தைத் தாமாகவேக் கற்றுத்தேர்ந்தார்.ஆனால் தமிழில் இருந்த ஆவலால் உந்தப்பட்டு நாராயண பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். அப்போதே தமிழில் நீலலோசினி .என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.  சைவத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக சோமசுந்தர நாயக்கர் என்பவரிடம் சைவ நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். மனோன்மணியம் சுந்தரனார் உதவியுடன் கவிதை நாடகங்களையும் எழுதத் தெரிந்து கொண்டார். திருவனந்தபுரத்தில் அவருக்குத் தமிழாசிரியர் வேலை கிட்டிற்று. அங்கிருந்து சென்னை வந்தபோது சூரியநாராயண சாஸ்திரியாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக கிறிஸ்டியன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். சிறந்த சைவரான இவர், சைவ சித்தாந்தம் குறித்து சொற் பொழிவுகள் செய்து கொண்டிருந்தார்.  பின்னர் சைவ சித்தாந்த மஹா சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார். பல்கலைக் கழகம் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்ற முறை கொண்டுவந்த பின்னர் பல தமிழாசிரியர்கள் பதவிகளை இழந்தனர். முன்னரே குறிப்பிடப்பட்ட மில்லர் என்ற ஆங்கிலேயர் தழாசிரியர்களுக்காக வாதாடினர். அப்போது ஒரு துறவியாகவே மாறிவிட்ட அடிகளார், பல சைவ சொற்பொழிவுகளுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் பல சைவ சித்தாந்த நூலகள் எழுதியுள்ளார். முருகக் கடவுள் மீதும் எழுதியுள்ளார். காளீதாசரின் சமஸ்கிருத சாகுந்தலத்தைத் தமிழில் வடித்தார். அவர் எழுதிய மற்ற நூல்கள்,பட்டினப்பாலை ஆராய்ச்சியுறை(1906), சிந்தனைக் கருத்துகள் (1908) ஆகும். ஜி. டபிள்யூ. எம். ரெய்நால்ட்ஸ் ஆங்கில நாவலொன்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழில் கதை சொல்லிகளும் கதைகளும்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலம் கற்ற தமிழர்கள் தமிழிலெழுதத் தொடங்கினர். அச்சு முறையும் சுலபமாகக் கிடைத்தமையால் அவர்களால் சமூகத்திற்குத் தமது எண்ணங்களை கதைகள் மூலமாக எடுத்துக் கூற முடிதது. அப்படி பிரபலமான எழுத்தாளர்களில் சிலர், வேதநாயகம் பிள்ளை (1826-1889), பி. ஆர். ராஜம் அய்யர்(1872-1898), ஏ. மாதவய்யா(1872-1925) மற்றும் நடேச சாஸ்திரி முதலானோர். இவர்கள் எல்லோருமே அடிப்படையில் ஆங்கில நாவலாசிரியர்களின் கதை சொல்லும் யுக்திகளையும் முறைகளையும் தான் கைப்பற்றினர். சாதாரணமாக நம்பபப்படுவது தமிழின் முதல் நவீனம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879ல் எழுதிய  பிரதாப முதலியார் சரித்திரம் என்பது. ஆனால் அதற்கு முன்னரே தூசில் வீரவல்லி சேஷய்யங்கார் என்பவர் ஆதியூர் அவதானி சரித்திரம் என்ற கவிதை வடிவிலான நவீனத்தை தந்துள்ளார். இதன் பிரதி இந்தியாவில் எங்கும் கிடைக்காத நிலையில் திரு. சிவபாதசுந்தரம் என்பாரின் முயற்சியால் இலண்டனின் பிரிட்டிஷ் ம்யூசியம் நூலகத்தில் இருப்பது தெரிந்தது. இந்நாவல் சென்னையின் இரிசப்ப மேஸ்திரி தெருவிலிருந்த் ஸ்ரீதர பிரெஸ்ஸில் அச்சடிக்கப்பட்டது. அதன் தலைப்பு பக்கத்தில் இவ்வாசகம் ஆங்கிலத்தில் காணப்படுகிறது: “Athiyur Avadhani or The Self-Made Man An original Tamil Novel delineating pictures of Modern Hindu Life, by Professor Seshiengar”  and is dedicated with the following words: “Eyre Burton Powell Esquire, m.a., c.s.i. Director of Public Instruction Madras and Former Principal of the Presidency College:- This little volume is most respectfully inscribed as a token of esteem and gratitude. By his most affectionate pupil and obedient servant – The author.”

கவிதையாக வார்க்கப்பட்டுள்ள இந்நாவல், சமூக சீர்திருத்தங்களையும் பெண்ணினத்தின் முக்கியத்துவத்தையும் குறிப்பதால் இதை சமூக சீர்திருத்த முன்னோடியாகக் கருதலாம்.

உரைநடையில் 1857ல் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். ஆனால் அதை வெளியிட 22 ஆண்டுகள் ஆயின! சாமுவேல் வேதநாயகம் பிள்ளை(1826-1889) ஒரு அரசாங்கப் பணீயாளர். இவரது நாவலில் ஆங்கிலேய நாகரீகத்தின் தாக்கத்தைக் காணலம். இவர் எழுதிய மற்றொரு நூல் பெண்கல்வி ஆகும். அடுத்து எழுதப்பட்ட முழு நீள நாவல் கமலாம்பாள் சரித்திரம். இது 1891ல் பி. ஆர். ராஜம் அய்யரால் எழுதப்பட்டது. விவேக சூடாமணி என்ற பத்திரிகையில் பிப்ரவரி 1893 இதழிலிருந்து தொடராக வந்தது.  பத்மாவதி சரித்திரம் என்ற நாவல் ஏ. மாதவய்யாவால் 1898ல் பதிப்பிக்கப்பட்டது. இதுவும் சமூக இன்னல்களைத் தெளிவுறுத்துகிறது. .1917ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட தமிழர் கல்விச் சங்கம் தமிழ்ர் நேசன் என்ற ஒரு பத்திரிகையை நடத்திவந்தது. இதன் ஆசிரியர் பெ. நா. அப்புஸ்வாமி அய்யர். (பெ. நா. சு). இவர் மாதவய்யாவின் சகோதரரின் மகன். இப்பத்திரிகையிலும் மாதவய்யா தொடர்ந்து எழுதி வந்தார். . இவர் ஹிந்து நாளிதழில்1910 ஆம் ஆண்டில் வாராவாரம் ஒரு ஆங்கிலச் சிறுகதை எழுதிவந்தார். இவற்றை (27 கதைகள்) கஸ்தூரி அய்யங்கார் இரண்டு பதிப்புகளாக Kusika’s Short Stories என்ற தலைப்பில் 1912ல் வெளியிட்டார்.  12 வருடங்களுக்குப் பிறகு அவற்றை குசிகர் கதைகள் என்ற தலைப்பில் மாதவய்யாவே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ராஜம் அய்யரும் மாதவய்யாயும் சம காலத்தவர்கள். ஒரே கல்லூரியில் படித்தவர்களும் கூட.

தமிழுக்குப்புத்துயிர் ஊட்டியவர் சி. சுப்ரமணிய பாரதி(1882-1921) அவரது தந்தை சின்னசாமி அய்யர் பொறியாளராகத் தன்மகனைப் பார்க்க விழைந்தார்! ஆனால் பாரதியோ தமிழ் பால் இணையில்லாத காதல் கொண்டு கவிதைகள் புனைவதில் தமது ஆர்வத்தைக் காட்டினார். காசியில் சமஸ்கிருதத்தை நன்றாகக் கற்றுக் கொண்ட பின்னர் எட்டயாபுரத்தில் வாழ்க்கை பிடித்தமின்றி மதுரையில் சில நாட்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் ஆசிரியர் சுப்பிரமணிய அய்யரின் முயற்சியால் அப்ப்த்திரிகையில் மொழிபெயர்ப்பாளராக ஆரம்பத்தில் சேர்ந்தார். ஆனால் அவரது நோக்கமெல்லாம் நாட்டைப் பற்றியும் மொழியைப் பற்றியதுவுமாகவே இருந்தது. சுப்பிரமணிய அய்யரும் இவரது மேன்மையை உணர்ந்து சுதேசமித்திரனிலேயே உதவி ஆசிரியராக நியமித்தார். பாரதிக்குத் திலகரின் தாக்கம் அதிகமாக இருந்தது. வைத்யநாதய்யர் என்பவர் அப்போது நடத்திக் கொண்டிருந்த சக்ரவர்த்தினி என்ற பத்திரிகையின் ஆசிரியர் பதவிக்கு தக்கவரைத் தேடிக்கொண்டிருக்கையில் சுப்பிரமணிய அய்யர் பாரதியைப் பரிந்துரைத்தார். அங்கு 1905 ல் சேர்ந்த போதும் சுதேச மித்திரனிலும் தொடர்ந்து பாரதி எழுதிக் கொண்டிருந்தார். அப்போதுதான் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தேமாதரம் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்து இசையுடன் பாட வழிசெய்தார். அப்போது தேசியம் தலையெடுத்திருந்தது. அதில் மிக்க நாட்டம் கொண்ட திருமலாச்சாரியார் 1906 ல் இந்தியா (தமிழ்) பால பாரதா (ஆங்கிலம்) என்ற இரு பத்திரிகைகளைத் தொடங்கினார். அவற்றிற்கு பாரதியை ஆசிரியராக வேண்டினார். அவற்றில் தான் உணர்ச்சியூட்டும் தேசீயக் கட்டுரைல்களை பாரதி எழுதினார். முதன் முதலாக தமிழ் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுதலையும் கொணர்ந்தார். அதில் அவர் பல புனைப் பெயர்களில் (சக்திதாசன், ஷெல்லிதாசன், தேசபக்தன் வேதாந்தி) எழுதிக் கொண்டிருந்தார். அவரது எழுத்துகள் எளிமையாகவும் படிப்பதற்கு இனிமையானதாகவும் இருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. 1908ல் அவரது தீவிர எழுத்தும் கருத்துகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அச்சத்தை உண்டாக்கின. தேசத்துரோக விதிகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம என்ற எண்ணத்தால்நண்பர்கள் அவரை பாண்டிச்சேரிக்குச் செல்லத்தூண்டினர். அங்கு அவர் பத்து வருடங்கள் இருந்தார். அதுதான் அவரது அதிக படைப்புகளைக் கண்ட காலம். சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அவரது பாட்டுகளைரசித்தனர். எல்லோர் நாக்கிலும் அப்பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆங்கிலத்தில்நல்ல தேர்ச்சி பெற்றிருந்த பாரதி ஹிந்து நாளிதழிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் ராம்சே மெக்டானல்டுக்கு எழுதிய நீண்ட கடிதமொன்று ஹிந்துவில் பிப்ரவரி 10, 1914ல் ‘Police rule in India’ என்ற தலைப்பில் வெளியானது. அது அன்றைய சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. 1918ல் இந்தியா திரும்பிய பாரதி மறுபடியும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். ஆனாலப்போதே அவரது உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் காலம் சென்ற போது இறுதிச் சடங்கிற்குக் கூட அக்குடுமப்த்தினரிடம் பணமில்லை! மயானத்தில் சொற்ப மனிதர்களே இருந்தனர். பின்னர் தான் தமிழ் நாடு அவரது பெருமையை உணர்ந்தது.

பெண் எழுத்தாளர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வை. மு கோதைநாயகி அம்மாள்(1901-1960) வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள் முறையாகக் கல்வி பயின்றதில்லை. பள்ளியே சென்றதுகிடையாது! ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பம் சிறந்த பண்டிதர்களைக் கொண்டதாக இருந்தது. ஆகையால் கணவரின் ஒத்துழைப்புடன் கற்கத் தொடங்கினார். எழுதக் கற்குமுன்பே அவருக்கு நாடகம் எழுதுவதில் ஈடுபாடு இருந்தமையால், பட்டம்மாள் என்ற தோழியின் துணையுடன் (கோதை சொல்ல பட்டம்மாள் எழுதுவார்) அவ்வாறு எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திர மோஹினி.  இதை நாடகமாக அரங்கேற்ற பம்மல் சம்பந்த முதலியார் இசைந்தது கோதைக்கு ஊக்கத்தை ஊட்டியது. அவரது முதல் நாவல் வைதேஹி வடிவூர் துரைசாமி அய்யங்காரால் அவரது மனோரஞ்சனி என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அவரது கணவர் பார்த்தசாரதி கோதையின் திறமையை உணர்ந்து அப்போது நிதியின்றி தவித்துக் கொண்டிருந்த ஜகன்மோஹினி என்ற பத்திரிகையின் உரிமையை வாங்கி கோதைநாயகிக்குத் தந்தார். ஆகையால் இப்போது கோதையால் தனது சஞ்சிகையிலேயே தொடர்கதைகளெழுத முடிந்தது. முக்கியமாகப் பெண்களிடையில் இப்ப்த்திரிகை பெரும் மதிப்பைப் பெற்றிருந்தது காந்தீயத்தில் மிகவும் பற்று கோண்டிருந்த கோதை இப்பத்திரிகையை பெண்கள் முன்னேற்றத்திற்கும், விழ்ப்புணர்ச்சிக்கும், தேசீய போராட்டாத்திற்கும் ஒரு கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார். தனது வாழ்நாட்களில் அவர் 115 நாவல்களை எழுதியுள்ளார். அவரால் ந்ன்கு பாடவும் முடிந்ததாகையால் விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் தேசீய உணர்வுப் பாடல்களையும் பாடி. மக்களுக்கு இப்போராட்டத்தில் ஈடுபாடு உண்டாக்ச் செய்தார். ஜகன்மோஹினியின் விற்பனை அதிகரிக்கவே 1937ல் சொந்த அச்சகத்தை நிறுவிக்கொண்டார். சீனிவாச அய்யங்கார் இல்லத்திற்கு காந்தியடிகள் வருகை தந்த போது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இதுதான் அவரது வாழ்க்கையின் ஒரு முக்கிய திருப்புமுனை. பட்டாடையே உடுத்திப்பழப்பக்கப்பட்ட கோதைநாயகி அம்மாள் இப்போது கதராடை மட்டும் அணியத் தொடங்கினார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகிய சுதந்திர்ப் போராட்ட வீராங்கனைகளுடன் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டார். 1931 மகாத்மா கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். கைது செய்யப்பட்டபோது ஆறுமாதச் சிறைத்தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது ஆனால் அபராதம்கட்ட அவர் மறுத்ததால், கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அவருக்களிக்கப்பட்டது.. அப்போது கூட அவர் தமது பத்திரிகைக்கு நாவல் எழுதத் தவறவில்லை.

சிறையில் அவர் இருந்த போது “ஜகன்மோகினி”யை அவர் கணவர் பார்த்தசாரதி வெளியிட்டு வந்தார். பத்திரிகைக்குக் கதை இல்லையே என்று கணவர் கவலைப்படாமல் இருக்க, சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் நாவல் எழுதி அனுப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட நாவல்தான் “உத்தமசீலன்”.

இரண்டாவது உலகப்போரின் போது யுத்த பீதி காரணமாக மக்களை நகரை விட்டு வெளியேறப் பிரசாரம் செய்தபோது “ஜகன்மோகினி” அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் ஒரு சிற்றூரில் குடும்பம் குடியேறியது. நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே “ஜகன்மோகினி” அலுவலகத்தையும் அச்சகத்தையும் கொண்டு வந்த.வை.மு.கோ. தன் வாழ்நாளில் 115 நாவல்களை எழுதியுள்ளார்.அவை சமூகப் பிரச்சினைகளான பெண்களின் அவலங்களைச் சித்திரித்தது  மட்டுமின்றி அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வழிவகைகளையும் தெரிவித்தன.

திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரம் (1883-1953) திரு. வி.க. என்றறியப்பட்டவர், தமிழில் மட்டுமின்றி தொழிலாளர் நலனுக்காகவும் பாடுபட்டவர். மறைமலை அடிகளிடமும் கதிர்வேல் பிள்ளையிடமும் தமிழ் பயின்ற திரு. வி. க., ஆரம்பத்தில் தேசபக்தன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். நவசக்தி என்றவொரு பத்திரிகையையும் நடத்தி வந்தார். அவரது நூல்களில்பிரசித்தி பெற்றது மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்பதாகும்.  அடுத்துப் பாராட்டு பெற்ற நூல் பெண்ணின் பெருமை. சிறந்த சைவரான திரு வி க முருகன் அல்லது அழகு என்ற ஒரு நூலும் எழுதியுள்ளார்.

ம. பொ. சி என்றறியப்பட்ட ம். பொ. சிவஞான கிராமணியார்(1906-1995) சிலப்ப்திகார ஆய்வினால் பெரிதும் அறியப்பட்டவர். சங்க இலக்கியங்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார்.  தமிழ் நாட்டில் முதல் சிலப்பதிகார விழா எடுத்தவர்.  .

மற்ற சிறந்த தமிழ் ஆசிரியர்கள் சாகித்ய அகதெமியின் முதல் தமிழ் இலக்கியப் பரிசு பெற்ற , ரா. பி.சேதுப்பிள்ளை (1896-1961)  மு. வரதராசனார். (1912-1974) தமிழில்முதல் ஞானபீட பரிசு பெற்ற அகிலன் என்ற அகிலாண்டம் (1922-1988) முதலானோர்.

தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்.

காலனி ஆட்சியின் இறுதி நாட்களில் தமிழில் ஒரு மறுமலர்ச்சி இயக்கம் உண்டாயிற்று. இன்றைய தமிழின் திருப்புமுனையாகவும் அமைந்தது. ஆங்கிலத்தில் Avant-Garde என்று கூறப்படும்  இலக்கியக் கலைப் பரிசோதனையை அவ்வாறு மேற்கொண்டவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று சுட்டப்பட்டனர். மணிக்கொடி என்ற ஒரு இலக்கியப் பத்திரிகை ஸ்டாலின் ஸ்ரீனிவாசனால் தொடங்கப்பட்டது. இதன் முதலாசிரியர் வ. ரா., என்ற வ. ராமசாமி அய்யங்கார். உதவி புரிந்தவர் டி. எஸ் சொக்கலிங்கம். இம்மூவரும் அப்பத்திரிகையின் பிதாமகர்கள். அதில் எழுதியவர்கள் எல்லோருமே ஆங்கில எழுத்துகளை நன்கு படித்தவர்கள். அன்றைய உலக இலக்கிய நடைமுறையைத் தெரிந்து கொண்டு அது போல தமிழையும் ஆக்க நினைத்தவர்கள். சமகாலப் பிரச்சினகளையும் அவற்றின் தீர்வுகளையும் தமது சிறுகதைகள் மூலமும் கட்டுரைகள் வழியாகவுன் ஆய்ந்தவர்கள். அதி எழுதியவரகளில் சிலர்: ந, பிச்சுமூர்த்தி, புதுமைப்பித்தன் (சொ. விருத்தாசலம்) சிட்டி சுந்தரராஜன், பாரதிதாசன், சி. சு. செல்லப்பா, மற்றும் பி. எஸ். ராமையா முதலானோர். அவர்களது முயற்சியே ஆங்கிலம் போல மொழியை ஒரு இலக்கிய வாகனமாகவே அமைத்து எளிய, பண்டித மொழியைத் தாண்டிய, படிக்கக் கூடியதும் சிந்திக்க வைப்பதுமான கதைகளை எழுதுவதேயாகும்.

அப்படித்தான் காலனி ஆட்சியின் போது தமிழ் வளர்ந்தது. ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் சில சிறந்த அறிஞர்களால் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. மாறாக முழுமை பெற்றது.

உசாத்துணை நூல்கள்

1. Companion Studies to the History of Tamil Literature by Kamil Zvelabil

2. Insiders, Outsiders, and the Tamil Tongue. Blake Wentworth

3. Tamil Literature, Volume 2, Part 1 By Kamil Zvelebil

4. History Printing and publishing in India – B S Kesavan

5. History of the Tamil Prose Literature  – Rao Bahdur V. S. Chengalvaraya Pillai.

6. A hundred years of Tamil Novels – Chitti Sundararajan and Sivapadasundaram0

7. Origin and Growth of Short stories in Tamil (Chitti Sundararajan and Sivapathasundaram)

You may also like

Leave a Comment