மயிலாப்பூர் சிறப்புகள்

“பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில்,

‘திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போக வேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய்விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றபடியே அஞ்சலி செய்துவிட்டுச் செல்வேன்’ என்று கூறியதுண்டு. “

– திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் முதற்பாகத்தில் பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதியது.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை திரிசிரபுரத்திலிருந்து சென்னை இருமுறை வந்தபோதும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்குள் செல்லும் அவகாசம் இல்லாமல் போனதற்குக் காரணம் அறிஞர்களையும், புலமைபெற்றோரையும், புரவலர்களையும் சந்தித்துப் பாடங்கேட்டல் என்பது அந்தக் காலத்தில் அரிதான அனுபவம்.

இப்படிப்பட்ட திருமயிலை கபாலீச்சரம் பழங்காலத்தில் மயில்கள் ஆடும் அடர்வனமாக இருந்திருக்கவேண்டும்.

முத்தியப்ப முதலியார் என்ற புரவலரால் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது. அதற்கு முன்பாக இந்தக் கோவில் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வருகைக்கு முன்புவரை கடற்கரைக்கோவிலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாயன்மார்கள், சைவக்குரவர்கள் பாடல் பெற்ற தலமான மயிலாப்பூர் கடற்கரைக்கோவிலானது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி இரண்டிற்கும் சோழமண்டலப் போர்களின் களமாக பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்து சிதைந்தது.

இப்போதுள்ள கோவிலில் அமைந்துள்ள 36.5 மீட்டர் உயரமுள்ள கிழக்கு கோபுரம் 1906 -ல் விஜயநகரப் பேரரசு பாணியில்
கட்டப்பட்டது. கோபுரங்களில் இந்து புராணக்கதைகள் அனைத்தும் கல்லினால் வடிவமைக்கப்பட்டன. பிற்காலத்தில் வண்ணப்பூச்சுகள் தொன்மச்சிற்பச் சிறப்பைக் குறைத்துவிட்டன. ஆகஸ்டு 2004-ல் ரூ. 1.6 கோடியளவில் மஹாகும்பாபிஷேம் நடத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. சந்தனம், பச்சைக்கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட மூலிகைகள் பூச்சிகொல்லிகளாக இதற்கு பயன்படுத்தப்பட்டன.
ராஜகோபுரம் கலசங்களுடன் 21 விமானங்கள் கொண்டது. புதிய கொடிக்கம்பம் பொன்தகடு வேயப்பட்டது. கோவில் கற்சிற்பங்கள் எண்ணெய்ப் பிசுக்கினால் சிதையாமல் காக்க சிறப்பு வார்னிஷ் பூசப்பட்டது.

பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெறும். அறுபத்துமூவர் உற்சவம் நடைபெறும் பத்து நாட்களிலும் விழாக்கோலம் பூண்டிருக்கும் மயிலாப்பூர்.

கோலவிழியம்மன் கோவில்,
17-ஆம் நூற்றாண்டு:
விருப்பாட்சீஸ்வரர் கோவில்,
காரனேசுவரர் கோவில்,
மாதவப்பெருமாள் கோவில்,
வள்ளீசுவரர் கோவில்

18-ஆம் நூற்றாண்டு:
மல்லீசுவரர் கோவில், கேசவப்பெருமாள் கோவில், வேதாந்ததேசிகர் கோவில்
ஆஞ்சநேயர் கோவில்

19ஆம் நூற்றாண்டு:
முண்டகக்கண்ணியம்மன் கோவில்,
அப்பர்சாமி கோவில்,

-என்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தவிரவும்
எல்லாமே புராதனக்கோவில்கள்!
1917 -ல் ஸ்ரீராமகிருஷ்ண மடம் அமைக்கப்பட்டது. பிரபஞ்சக்கோவிலாக நவீன வடிவில் இப்போது அமைக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.

திருமயிலைக் குளக்கரையின் தென்கரையில் தெற்குமாடவீதியிலமைந்த வியாசர்பாடி விநாயக முதலியார் ஏற்படுத்திய சித்திரச் சத்திரத்தின் பெருமையைச் சிறப்பித்து நூறு விருத்தங்கள் கொண்ட சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலையை பல புலவர்களுக்கிடையேயிருந்து
அரங்கேற்றினார் மகாவித்துவான் திரிசிரம் மீனாட்சிசுந்தரனார்.

கோவில் மேற்புறக்குளம் அமைக்க 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப் நிலம் வழங்கியது சமயநல்லிணக்கத்தை குறிப்பதாகிறது. இஸ்லாமிய மொகரப்பண்டிகையின்போது இஸ்லாமியர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இக்குளம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

சந்நிதித்தெருவில் அமைந்த கோவில் தரைத்தளம் வரைவுப்படி ராஜகோபுரம், ஸ்ரீ நர்த்தன விநாயகர், ஸ்ரீ கபாலீசுவரர் சந்நிதி, ஸ்ரீ கற்பகாம்பாள் சந்நிதி, பூம்பாவை சந்நிதி, நந்தி அமைந்துள்ளன.

திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள சமஸ்கிருத கல்லூரி 113 ஆண்டுகளுக்குமுன்பு உருவானது. மகாத்மாகாந்தி, ரவீந்திர நாத் தாகூர் வருகை புரிந்த பெருமைக்குரியது.

திருவிக தொடங்கிய நவசக்தி தினசரி, கிவாஜ ஆசிரியராக இருந்த கலைமகள் பிரசுராலயம் மயிலாப்பூரில் அமைந்துள்ளன என்பது சிறப்பு.

தொகுப்பு : இரா.குமரகுருபரன்

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *