Niveditha Louis
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையில் தகுதியான நபராக நான் கருதுபவர் இவர். பூந்தமல்லி ராஜகோபால். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் P. Rajahgopaul! ஜான் ஆண்டர்சன் (மதராஸ் கிறிஸ்துவ கல்லூரியை தொடங்கியவர்) ஸ்காட்லாந்து மிஷன் பணியை 1837ஆம் ஆண்டு கறுப்பர் நகரத்தில் தொடங்கினார். ஆண்டர்சனிடம் தஞ்சமடைந்து முதன் முதலாய் மதம் மாறுவதாக வேண்டுகோள் வைத்தது சிறுவன் ராஜகோபால் தான். அவனும், நண்பன் வெங்கடராமையா மற்றும் எத்திராஜூலு ஆகிய மூவருக்கும் ஜூன் 20, 1839 அன்று திருமுழுக்கு அளித்தார் ஜான் ஆண்டர்சன்.
பெற்றோர் விடவில்லை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ஆண்டர்சன் கிறிஸ்துவ மதத்திற்கு அவர்களை மாற்றிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. அசராத ராஜகோபால், நீதிமன்றத்தில் சுய விருப்புடன் தானே மதம் மாறியதாக சாட்சி சொல்ல, குடும்பம் அவரைத் தலைமுழுகியது! தளராத ராஜகோபால், ஆண்டர்சனிடம் கல்வி கற்றார். 1846ஆம் ஆண்டு மிஷனரியாக, விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராக பணியேற்றார். ஆண்டர்சன் நோய் வாய்ப்பட்டு கிடந்த போது, அவரை அள்ளிக் கொண்டு லண்டன் சென்று, உடல் நலம் பேணி மீட்டுக் கொண்டுவந்தார் ராஜகோபால்.
1870ஆம் ஆண்டு கறுப்பர் நகரத்தின் சேரியில் தலித் மாணவர்களுக்காக ராஜகோபால் ஏழைகள் பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். 1877ஆம் ஆண்டு மே மாதம் ராயபுரம் பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். தம்பு செட்டித் தெருவில் ஒரு பள்ளியும், மின்ட் தெருவில் ஒரு பள்ளியும் தொடங்கினார். 1900ஆம் ஆண்டு தலித் பள்ளியை மூடிவிட்டு, அதன் மாணவர்களை ராயபுரம் பள்ளியில் இணைத்துக் கொண்டார். 1877ஆம் ஆண்டு அப்படி தொடங்கப்பட்ட பள்ளி தான் இன்றைய ராயபுரம் கிழக்கு கல்மண்டபம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ராஜகோபால் மேல்நிலைப் பள்ளி. மின்ட் பகுதியின் 5, கொண்டல் தெருவில் ராஜகோபால் நடுநிலைப் பள்ளி இன்றும் இயங்கி வருகிறது. அவர் தொடங்கிய ஆண்டர்சன் ராஜகோபால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இன்றும் தம்புசெட்டி தெருவில் இயங்குகிறது.
நகரின் மூன்று முக்கியப் பள்ளிகள் இந்த மிகச் சாதாரண மனிதனின் கல்வி ஆர்வம் மற்றும் அதை மக்களிடம் கொண்டு செல்லும் ஆவலால் இன்றும் அவர் பெயர் சொல்லி நிற்கின்றன! பள்ளிகள் சொல்லும் பெயரை நாம் மட்டும் வசதியாக மறந்து போனோம்!