Home Article திராவிட வித்யாபூஷணம்

திராவிட வித்யாபூஷணம்

by Dr.K.Subashini
0 comment

— தேமொழி.

     குடந்தை கல்லூரியில் இருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்கு 1903 ஆம் ஆண்டு மாற்றல் பெற்று வந்த உ.வே.சா., 1903 – 1919 ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் அங்கு பணியாற்றிய காலத்திலேயே மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற பொழுது, அந்தக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு ஒரு பாராட்டுக் கூட்டமும் நடந்தது. அவர் இறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே வாயிலில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றும் விதமாக 1948, மார்ச் 7 ஆம் நாளன்று உ.வே.சா. வின் உருவச்சிலையும் நாட்டப்பட்டது. அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன் பாரதியாரின் வாழ்த்துப் பாடலின் இறுதி இரு வரிகளும் இணைக்கப்பட்டன.

     “௳ மகாமகோபாத்தியாய, தாஷிணாத்யகலாநிதி, திராவிட வித்யாபூஷணம், மகாவித்வான், உத்தமதானபுரம் வே. சாமிநாதையர், D.LITT. (19-2-1855 – 28-4-1942), இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் (1903-1919), “பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” – பாரதி வாக்கு” என்று சிலையை தாங்கி நிற்கும் சிலை மேடையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.     இந்த சிலைநாட்டு விழாவிற்கு தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்கள் வெளியீடான ‘தமிழ்ப் பொழில்’ இதழ் (பார்க்க: தமிழ்ப் பொழில், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடு, துணர் : 23 மலர்: 9, திருவள்ளுவர் ஆண்டு 1979, சருவசித்து-மார்கழி, 1947- டிசம்பர்) மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து வெளியிட்டுள்ளது. பேராசிரியர், கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் உ.வே.சா. மீது எழுதிய புகழுரைக் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் விழாவில் பங்கேற்றவர்களைக் குறித்த குறிப்பும் கொடுக்கப்படுகிறது.

தமிழ்ப் பேராசிரியர், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் உருவச் சிலை நாட்டு விழா.
தமிழ்த் தாயின் திரு மைந்தர்களுள் ஒருவராகிய ஐயரவர்கட்குச் சென்னை இராசதானிக் கலாசாலையில் 1948, மார்ச்சு 7-ஆம் நாள், கலையியல் துறைத் தலைவர் திவான் பகதூர் வீரத்திரு. பேரறிஞர் ஆ. இலக்குமண சாமி முதலியார் அவர்கள் தலைமையில் உருவச்சிலை நாட்டு விழா நிகழ்ந்தது. அரசியற்றுறைத் தலைவர் திரு. ஓ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்கள் உருவச்சிலையைத் திறந்து வைத்தார்கள். தமிழ்நாட்டு விழாவாகித் தமிழ் மக்கட்கெல்லாம் மிக்க மகிழ்ச்சியளித்தது.

அவ்விழா நிகழ்ச்சிக்கு ஆம் முயற்சிகள் புரிந்த செயலாளர்கள், பொருள் முதலிய உதவிகளைச் செய்த திருவாளர்கள், விழா அவையினச் சிறப்பித்து நிகழ்த்திய அவைத் தலைவர்கள் பாராட்டுரையாளர்கள், அவையோர் முதலியோர்க் கெல்லாம் தமிழ்த் தாயின் வாழ்த்தும், தமிழுலகத்தார் நன்றியறிவும் உரியவாகும்.

பற்பல ஆண்டுகளின் முன்னரே, இச்சங்கத்தே ஐயரவர்கள் ஓர் ஆண்டு விழாத் தலைமை தாங்கிய காலத்தே இச்சங்கம்,

திருமேவு தமிழ்த்தாய்பாற் செய்தவங்கள் பலகோடி திரண்டு வந்தோர்
உருமேவி யுற்றவென உத்தமதா னச்சீரூர் உற்றோய் வாழி!
தருமேவி வளர்கரந்தைத் தமிழ்ச் சங்கப் பேரன்பா! தமிழர் தங்கள்
பெருவாழ்வே! வருக இவண்! பெரியோனே! வருக!தமிழ்ப்பேறே! வாழி!

என்று தொடங்கிச் செல்லும் வாழ்த்துப் பாவில் ஐயரவர்கட்கு இத்தகைய உருவச் சிலைகள் நாடெங்கும் நாட்டி, விழாக் கொண்டாட வேண்டிய நம் தமிழ் மக்கள் கடமையை எடுத்துக் கூறி, வேண்டிக் கொள்ளும் குறிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசால் சென்னை பெசன்ட் நகரில் 1942 ஆம் ஆண்டு இவரது நினைவாக உ.வே.சா நூல்நிலையம் தொடங்கப்பட்டது.

You may also like

Leave a Comment